குடும்ப பகை எதிரொலி: 10ஆம் வகுப்பு மாணவி பெட்ரோல் ஊற்றி கொலை

  • IndiaGlitz, [Monday,May 11 2020]

விழுப்புரம் அருகே இரு குடும்பத்துக்கும் இடையே ஏற்பட்ட முன்பகை காரணமாக பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

விழுப்புரம் அருகே சிறுமதுரை என்ற கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் இடையே முன்பகை இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்றிரவு ஜெயபால் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே சென்றிருந்த நிலையில் 10ஆம் வகுப்பு படிக்கும் ஜெயபாலின் மகள் ஜெயஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்

இந்த நிலையில் கணபதியின் மகன் முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகிய இருவர் திடீரென ஜெயபால் வீட்டுக்குள் சென்று ஜெயஸ்ரீ மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொளுத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த நிலையில் தீக்காயத்தால் படுகாயமடைந்த ஜெயஸ்ரீயை அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் உறவினர்களும் மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ஜெயஸ்ரீ அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இரவோடு இரவாக முருகன், கலியபெருமாள் ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் ஜெயஸ்ரீ மரணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இந்த வழக்கு தற்போது கொலை வழக்காக மாறும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

இரு குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு சிறுமி ஒருவர் கொடூரமாக பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது