ஓட்டின் மேல் ஏறி உட்கார்ந்த கல்லூரி மாணவி, உதவி செய்த பெற்றோர்கள்: ஆன்லைன் படுத்தும்பாடு
- IndiaGlitz, [Thursday,June 04 2020]
கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்புகளை கவனிப்பதற்காக ஓட்டின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு பாடத்தை கவனித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கேரளாவில் உள்ள கொட்டிப்புரம் என்ற பகுதியைச் சேர்ந்த நமீதா நாராயணன் என்றா கல்லூரி மாணவி பிஏ ஆங்கிலம் படித்து வருகிறார். இவர் தனது ஐந்தாவது செமஸ்டருக்காக தயாரான போது அவருக்கு ஆன்லைன் வகுப்புகள் சமீபத்தில் தொடங்கின. ஆனால் அவருடைய வீட்டில் உள்ள எந்த பகுதியிலும் இண்டர்நெட் சிக்னல் சரியாக கிடைக்கவில்லை
இதனை அடுத்து அவர் வேறு வழியின்றி வீட்டின் மேல் உள்ள ஓட்டின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டார். அங்குதான் ஓரளவுக்கு சிக்னல் கிடைப்பதால் ஓட்டின் மீது உட்கார்ந்து கொண்டு தனது செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்பை கவனிப்பதாகவும் கூறியுள்ளார். அவருடைய தந்தையும் தாயாரும் பள்ளியில் பணி புரிபவர்கள் என்பதால் படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து தங்கள் மகள் ஓட்டின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு ஆன்லைன் வகுப்பை கவனிப்பதற்கு அனுமதி அளித்தனர்
அதுமட்டுமின்றி ஓட்டின் மீது ஏறும் மகளுக்காக பிரத்யேகமாக ஒரு இரும்பு ஏணியையும் வாங்கி கொடுத்துள்ளனர். ஒவ்வொரு முறையும் கல்லூரி மாணவி ஓட்டின் மீது ஏறும்போது ஒருசில ஓடுகளை உடைத்து உள்ளார். ஆனால் அதைப் பற்றி பெற்றோர்கள் கவலைப்படாமல் மகனின் படிப்பே முக்கியம் என்று கூறியுள்ளனர்.
மேலும் மழை மற்றும் வெயிலுக்காக ஒரு குடையும் வாங்கி கொடுத்துள்ளனர். கல்லூரி மாணவி ஒருவர் தனது படிப்புக்காக ஓட்டின் மீது உட்கார்ந்து கொண்டு கையில் குடையும் பிடித்து கொண்டு ஆன்லைன் வகுப்பை கவனித்தது அந்த பகுதியில் உள்ளவர்களை ஆச்சரியப்படுத்தியது
கேரளாவில் கடந்த சில நாட்களாக ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி உள்ளன என்பதும் இதேபோன்று பல பகுதிகளில் சிக்னல் சரியில்லாமல் இருப்பதால் இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன