கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு விலக்கு கோரிய வழக்கு… உச்சநீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு!!!
- IndiaGlitz, [Friday,August 28 2020]
கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கியிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் முதல் இந்தியாவில் பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி பொதுத்தேர்வுகள் மற்றும் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாமல் போனது. இந்நிலையில் பல மாநில அரசுகள் பள்ளி படிப்புகளின் அனைத்துத் தேர்வுகளையும் ரத்து செய்து உத்தரவிட்டன. முன்னர் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் பொதுத்தேர்வு முடிவுகள்கூட பெரும்பாலான மாநிலங்களில் அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களின் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து மாநிலங்களிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை எழுந்ததைத் தொடர்ந்து பல்கலைக் கழக மானியக்குழு (UGC) இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் வழிகாட்டுதல்களை அனுப்பியிருந்தது.
இந்த அறிவிப்பை எதிர்த்து 31 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தனர். அந்த வழக்கின் மனுவில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வினை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. வழக்கின் அனைத்து வாதங்களும் முடிந்துவிட்ட நிலையில் கடந்த 18 ஆம் தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தற்போது நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை பல்கலைக் கழகங்கள் நடத்த வேண்டும் என்றும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இறுதியாண்டு தேர்வுகளை மாநில அரசுகள் தள்ளி வைக்கலாம் ஆனால் மாநில அரசுகள் தேர்வுகளை நடத்தாமல் தேர்ச்சியை அறிவிக்கக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.