தடுப்பூசி எப்போது கொடுப்பீர்கள்… மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
- IndiaGlitz, [Thursday,June 03 2021]
முதல் 3 கட்டங்களில் இதுவரை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத மக்களுக்கு எப்போது தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசை, உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளது. அதோடு தடுப்பூசி திட்டத்திற்கு செலவழிக்கப் பட்டதாகக் கூறப்படும் ரூ.35,000 கோடியில் இருந்து இதுவரை 18 வயதிற்கு மேல்பட்ட அனைவருக்கும் ஏன் இலவசமாக தடுப்பூசி போடப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பி உள்ளது.
இந்தியாவில் தடுப்பூசி கொள்கை தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கை நீதிபதி சந்தர சூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வரும் நிலையில், மத்திய அரசு உரிய கொள்கையை வகுக்காமல் தடுப்பூசி திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாக விமர்சித்து உள்ளனர்.
அதோடு மாறுபட்ட விலை நிர்ணயத்தால் 18 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் ஒரே சீரான தடுப்பூசி கிடைக்காமல் இருக்கிறது என்றும் ஒருவேளை மாநில அரசுகள் வெளிநாட்டில் இருந்து நேரடியாகத் தடுப்பூசிகளை வாங்கும் பட்சத்தில் மத்திய அரசு அதுகுறித்த சிக்கலை தீர்த்து வைக்குமா? அல்லது தடுப்பூசி கொள்கையில் மாற்றங்களை கொண்டு வருமா? எனவும் கேள்வி எழுப்பினர்.
இந்தியாவில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி கொள்கைப்படி இதோடு 3 தவணை காலக்கட்டம் முடிந்து விட்டது. ஆனால் இந்தியாவில் ஏராளமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாமல் இருக்கிறது. இதனால் அவர்களுக்கு எப்போது தடுப்பூசி செலுத்த போகிறீர்கள்?
இதுவரை 35 ஆயிரம் கோடி நிதி செலவழிக்கப்பட்டு இருக்கிறது. அப்படி இருக்கும்போது ஏன் இன்னும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசத் தடுப்பூசி கிடைக்கவில்லை?. அதோடு மத்திய அரசு தடுப்பூசி கொள்கையை வகுத்து விலை நிர்ணயம் செய்து இருக்கும்போது தடுப்பூசி கம்பெனிகள் தாங்களாகவே மாநிலத்திற்கும் தனியாருக்கும் விலையை நிர்ணயித்து இருப்பது ஏன்? இதுபோன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இதனால் மத்திய அரசு மேற்கொண்ட தடுப்பூசி கொள்முதல் குறித்த அனைத்துத் தகவல்களையும் பிரமாணப் பத்திரங்களாகத் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.