டிக் டாக் செயலியின் தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்
- IndiaGlitz, [Monday,April 22 2019]
'டிக்டாக்' செயலியால் பதிவு செய்யப்பட்டும் வீடியோக்களால் கலாசாரம் இழிவுபடுத்தப்படுவதாகவும், இதில் உள்ள வீடியோக்கள் ஆபாசத்தை ஊக்குவிக்கும் வகையிலும் இருப்பதாலும் இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்த வழக்கு ஒன்றை விசாரணை செய்த மதுரை ஐகோர்ட் கிளை, ‘டிக்டாக்’ செயலியை பதிவிறக்கம் செய்ய தடை விதிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பின்பற்றுமாறு கூகுள் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது. இந்த கடிதத்தை அடுத்து கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் இருந்து டிக் டாக் செயலியை நீக்கியது. இதனால் இந்தியாவில் யாரும் இந்த செயலியை டவுன்லோடு செய்ய முடியாத நிலை இருந்தது.
இந்த நிலையில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை உச்சநீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.