ஆதார் எண்ணை இணைக்க மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
- IndiaGlitz, [Friday,December 15 2017]
ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் அனைத்து ஆவணங்களிலும் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு கெடு விதித்துள்ளது. இதனை எதிர்த்து பல்வேறு அமைப்புகளும், தனி நபர்களும் சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரிக்கப்படபோது, இன்று இந்த வழக்கு குறித்த முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பிக்கவுள்ளதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதன்படி சற்றுமுன்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க மக்களை கட்டாயப்படுத்தக்கூடாது என்றும், வங்கி கணக்கு, பான் எண், நலத்திட்டங்கள், செல்போன் எண் உள்ளிட்டவற்றுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு அளித்த கால அவகாசமான 2018-ஆம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி என்பதை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக்கொள்வதாகவும், அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த இடைக்கால உத்தரவால் டிசம்பர் 31 என்று இருந்த காலக்கெடு மார்ச் 31 என்று மாறியுள்ளதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.