சரவணபவன் ராஜாகோபால் வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
- IndiaGlitz, [Friday,March 29 2019]
கொலை வழக்கு ஒன்றில் சரவணபவன் உணவக உரிமையாளர் ராஜகோபாலுக்கு சென்னை ஐகோர்ட் வழங்கிய ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட் இன்று உறுதி செய்துள்ளது.
புகழ்பெற்ற உணவகமான சரவணபவன் உணவக மேலாளராக இருந்தவர் பிரின்ஸ் சாந்தகுமார். இவருடைய மனைவி ஜீவஜோதியை அடைவதற்காக அவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் கடந்த 2001-ம் ஆண்டு கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று கொலை செய்ததாக குற்றம் சாற்றப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை செய்த பூந்தமல்லி நீதிமன்றம், ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. ஆனால் இந்த தண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரிக்க வேண்டும் என்று அப்பீல் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த சென்னை ஐகோர்ட், பூந்தமல்லி நீதிமன்றம் அளித்த 10 ஆண்டு சிறைதண்டனையை ஆயுள் தண்டனையாக அதிகரித்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட், ராஜகோபாலுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்ததோடு, ஜாமீனில் இருக்கும் அவர் ஜூலை 7-ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.