பழைய ரூ.500, ரூ1000 நோட்டுக்களை மாற்ற மீண்டும் ஒரு வாய்ப்பு!

  • IndiaGlitz, [Tuesday,July 04 2017]

மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அதிரடியாக அறிவித்தது. பொதுமக்கள் தங்கள் கைவசம் உள்ள செல்லாத நோட்டுக்களை டிசம்பர் 31க்குள் வங்கி, தபால் நிலையங்கள் ஆகியவற்றில் மாற்றி கொள்ளலாம் என்று அறிவித்தது.
கருப்புப்பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும், கருப்புப்பண முதலைகளைவிட சாதாரண பொதுமக்களே இதில் அதிகம் பாதித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளும் கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நேர்மையாக பணம் சம்பாதித்த ஒருவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் பணத்தை மாற்றாமல் வைத்திருந்தால் அவருக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கூறியது. இந்த வழக்கு மீண்டும் வரும் 18ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.