ஒரே வாரத்தில் சிக்கிய ஏடிஎம் கொள்ளையர் தலைவன்: தமிழக போலீஸ் சாதனை!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை உள்பட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் நூதனமான முறையில் கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் உள்ள டெபாசிட் இயந்திரங்களில் நூதனமான முறையில் ரூபாய் 50 லட்சத்திற்கும் அதிகமாக கொள்ளை நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
ஏடிஎம் கொள்ளையர்கள் ஹரியானாவை சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து தனிப்படை போலீசார் ஹரியானா சென்றனர். ஹரியானா காவல்துறையினர் உதவியுடன் முதலில் அமீர் என்பவரை கைது செய்த போலீசார் அதன்பின் வீரேந்திர சிங், நசீர் ஆகிய இருவரை அடுத்தடுத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி எஸ்பிஐ ஏடிஎம் கொள்ளையர்களின் தலைவன் சவுக்கத் அலி என்பவரை போலீசார் ஹரியானாவில் கைது செய்துள்ளனர். கொள்ளையர் தலைவனை சென்னைக்கு அழைத்து வர தற்போது காவல்துறையினர் ஏற்பாடு செய்து கொண்டிருப்பதாகவும் இன்று அல்லது நாளை சென்னைக்கு அழைத்து வரப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. கொள்ளையை தலைவரிடம் விசாரணை செய்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கொள்ளையர்கள் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், புதுவை உள்பட 4 மாநிலங்களில் தங்கள் கைவரிசையை காட்டிய நிலையில் தமிழகத்தில் கொள்ளை அடித்த ஒரே வாரத்தில் தமிழக போலீசாரிடம் பிடிபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏடிஎம் கொள்ளையர்களை ஒரே வாரத்தில் பிடித்து சாதனை செய்த தமிழக போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments