ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம்: எஸ்பிஐ வங்கியின் புதிய முயற்சி!
- IndiaGlitz, [Tuesday,August 20 2019]
வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க கடந்த சில வருடங்களாக வாடிக்கையாளர்கள் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி வந்தனர். ஆனால் இதன் மூலம் அதிக மோசடி நடந்து வருவதால் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கார்ட் இல்லாமல் பாஸ்வேர்டு மூலம் பணம் எடுக்கும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த முறையால் போலி ஏடிஎம் கார்டு மோசடியை தவிர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
யோனோ மொபைல் ஆப்ஸ் என்ற செயலியை மொபைலில் தரவிறக்கம் செய்து அதில் 6 இலக்க ரகசிய எண்ணை வாடிக்கையாளர்கள் உருவாக்கி அந்த எண் மூலம் ஏடிஎம் கார்டு இல்லாமல் பணம் எடுக்கலாம். இந்த வசதியை எஸ்பிஐ வங்கி கடந்த மார்ச் 15-ம் தேதி முதல் ஒருசில குறிப்பிட்ட எஸ்பிஐ வங்கி கிளைகளில் பரிசோதனை அடிப்படையில் நடைமுறைபடுத்தியது. இந்த முறை வெற்றிகரமாக செயல்பட்டதை அடுத்து விரைவில் நாடு முழுவதும் இந்த வசதியை அறிமுகம் செய்யவுள்ளது. மேலும் இந்த வசதியை பயன்படுத்த ஏடிஎம்கள் போலவே ‘யோனோ கேஷ் பாயிண்ட்’ என்ற பெயரில் ஏடிஎம் மையங்கள் போல நிறுவப்பட்டு வருவதாகவும், இங்கு ஏடிஎம் கார்டுகள் இல்லாமலேயே வாடிக்கையாளர்களை பாஸ்வேர்டு மூலம் பணம் எடுத்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது ‘யோனோ மொபைல் செயலி' மூலம் வாடிக்கையாளர்கள் ஒரே பரிவர்த்தனை மூலம் ரூ.10000 வரையிலும் நாள் ஒன்றுக்கு 2 முறையும் பணம் எடுத்து கொள்ளலாம்.
நாடுமுழுவதும் தற்போது 68,000 யோனோ கேஷ் பாயிண்டுகள் உள்ளதாகவும், அடுத்த 18 மாதங்களில் இதனை 10 லட்சமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் எந்த ஒரு டெபிட் கார்டும் இல்லாத நிலையை உருவாக்குவோம் என்றும் எஸ்பிஐ வங்கியின் தலைவர் ரஜினிஷ் குமார் தெரிவித்துள்ளார்.