சவரகத்தியின் முன்னோட்டத்தை பார்த்தவர்கள் இது மிஷ்கினின் மாமூல் படம் அவருடைய ரசிகர்களுக்கு மட்டும் பிடிக்கும் என்றே நினைத்திருப்பார்கள் என்பது உண்மை. மிஷ்கினின் தம்பி ஜி ஆர் ஆதித்யா தன்னுடைய நடிகர்களிடம் சிறந்த நடிப்பை வாங்கியும் சிறந்த திரைமொழியாலும் அனைவருமே ரசிக்கும்படியான உன்னத படைப்பை தந்திருக்கிறார்.
பிச்சை என்கிற ராம் ஒரு சவர தொழிலாளி தன்னுடைய பரம்பரையே அந்த தொழில் செய்தவர்கள் என்பதை பெருமையாக நினைப்பவர். நிறை மாத கர்ப்பிணியான அவர் மனைவி பூர்ணா ரெண்டு காதும் கேட்காதவர் ஆனால் அது தெரியாமலே இருப்பவர். இந்த தம்பதியும் அவர்கள் இரண்டு குழந்தைகளும் பூர்ணாவின் தம்பி செய்யும் திருட்டு கல்யாணத்துக்காக பைக்கில் செல்லும்போது ஒரு கார் லேசாக மோதி ராம் மட்டும் கீழே விழா அவர் குடும்பம் ஏளனமாக சிரித்துவிடுகிறார்கள். கோபம் அடைந்த ராம் அந்த வண்டியிலிருப்பவர்களிடம் சண்டைக்கு போகிறார். வண்டியில் இருப்பவர்கள் அரை லூசு கொலைகாரன் மங்கா என்கிற மிஸ்கின் தலைமையில் இருக்கும் ரௌடிகள். நடக்கும் தள்ளு முள்ளுவில் மிஸ்கின் ஆத்திரமடைந்து ராமை கொன்றே தீருவேன் என்று சபதம் ஏற்று துரத்துகிறார். அவரிடம் இருந்து ராமும் அவர் குடும்பமும் தப்பித்தார்களா இல்லையா என்பதே நகைச்சுவையும் உணர்வுபூர்வமும் கலந்த மீதி திரைக்கதை.
பிச்சை என்கிற அந்த வேடத்தில் ராம் வாழ்ந்து காட்டியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு பயங்கர ரௌடியிடம் மோதுவதாகட்டும் பின்னர் பயந்து ஓடுவதாகட்டும் அனைத்திலுமே தேர்ந்த நடிப்பு. மிஷ்கினிடம் அவர் போடும் கடைசி சண்டையில் தன் பிள்ளைகள் முன்னாள் தோற்று போகும்போது காட்டும் உணர்ச்சி கண் கலங்க வைக்கிறது. பூர்ணாவுக்கு தன் வாழ்நாள் கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது அவரும் அதை மிக செம்மையாக செய்திருக்கிறார். படத்தின் பாதி நகைச்சுவைக்கு அவர் தான் காரணம். தன் தம்பியை பற்றி பேசும்போது மட்டும் ஒரு குழைவு கணவனிடம் கறார் பல சமயங்களில் கெட்ட வார்த்தை என்று குரலிலும் அசத்துகிறார் undefined இடையில் எட்டி பார்க்கும் மலையாள வாடையை தாராளமாக மன்னித்து விடலாம் கர்ப்பிணி வயிற்றை தூக்கி கொண்டு வில்லன்களுக்குஅல்வா கொடுக்கும் பூர்ணாவை அடுத்த வருட விருது பட்டியல்களில் நிச்சயம் பார்க்கலாம். வழக்கம் போல் தன்னுடைய படங்களில் வரும் அதே மிஷ்கின்தான் என்றாலும் இதில் வெகுவாக கவர்கிறார். தன்னை தவிர்த்து அடுத்தவர் இயக்கம் என்பதாலோ என்னவோ தெரியவில்லை எளிதில் கிரகிக்க முடியாத அந்த பாத்திரத்துக்குள் பொருந்தி கூர்மையான நடிப்பை தந்து மனதில் நிற்கிறார். மிஷ்கினின் மாமாவாக வரும் மோகன் மற்றும் சங்கீதா பாலன் ஆகியோர் மற்றுமின்றி அணைத்து நடிகர்களும் தங்கள் பாத்திரம் அறிந்து அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
சவரகத்தியில் வெகுவாக கவர்வது படம் நெடுகே தெளிக்கப்பட்டிருக்கும் நகைச்சுவைதான். உயிருக்கு பயந்து ராம் ஒரு குப்பை தொட்டியில் ஒளிந்திருக்க குப்பை பொறுக்கும் ஒருவன் அவனை கண்டுகொள்ளாமல் தன் வேலையை பார்ப்பது ஜோசியர் மிஷ்கினை பற்றி எச்சரிக்க போன் செய்ய டமாரம் பூர்ணா எடுப்பது என்பது போல் நிறைய காட்சிகள் உள்ளன. உணர்வு பூர்வமான காட்சிகளுக்கும் பஞ்சமில்லை உதாரணத்திற்கு சங்கீதா பாலன் தன் மகளின் காதலனுக்கு சாபம் விட கடைசியில் அது போன்றே நடந்திருப்பதை கண்டு உறைவது அவரே ஆத்திரத்துடன் தன் பெண்ணை தேடி கொண்டிருக்க கண்டு பிடிக்கும் போது கர்ப்பிணியை காப்பாற்றுவது ஒரு ஊமை ராமை ஊக்குவிப்பது கடைசியில் ஒரு குழந்தை பிறக்கும்போது படத்தின் பல கதாநாயகர்கள் வெளிப்படுவது என்று புல்லரிக்கும் காட்சிகள் பல உண்டு.
குறை என்று பார்த்தால் மிக பெரிய குறை அணைத்து கதாபாத்திரங்களும் மிஷ்கினாக இருப்பது அவரை போலவே உடல் மொழியும் பேச்சும் இருப்பது. அட்லீஸ்ட் ராமுக்கும் பூர்ணாவுக்குமாவது வேறு வடிவம் கொடுத்திருக்கலாம். குழந்தைகளோடு இருக்கும் ஒரு சாதாரண ஆளும் கர்ப்பிணி பெண்ணும் பல முறை ரௌடியைகளிடமிருந்து ஈசியாக தப்பிப்பார்களா என்கிற லாஜிக் கேள்வியும் தொற்றி கொள்கிறது. மிஸ்கின் படங்களுக்கே உரித்தான சாவகாசமாக போகும் திரைக்கதை சில தரப்பு ரசிகர்களை அதிருப்தி படுத்தலாம்.
ஆரோல் கரோலி இசை வி ஐ கார்த்திக் ஒளிப்பதிவு ஜூலியன் எடிட்டிங் என்று அணைத்து தொழில் நுட்பமும் நேர்த்தி சண்டை பயிற்சியாளர் தினேஷ் குமாருக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள். திரைக்கதை எழுதி தயாரித்திருக்கிறார் மிஸ்க்கின் அவருடைய பாணி காட்டு கத்தலும் பாத்திரங்கள் அத்திரி புதிராக ஓடிக்கொண்டே இருந்தாலும் கதையும் அவர்களுடன் முன்னேறி செல்வதால் அலுப்பு தட்டவில்லை. ஜி ஆர் ஆதித்யா தன் அண்ணனுடைய நிழலில் படம் தந்திருந்தாலும் திரை ஊடகத்தின்மேல் ஒரு நல்ல புரிதல் இருப்பது வெளிப்படுவதால் அவரை தாராளமாக தமிழ் சினிமாவுக்கு வரவேற்கலாம்.
நகைச்சுவையும் உணர்வுபூர்வமான காட்சிகளும் சரிவர கலந்து கூர்மையாக இருக்கும் இந்த சவரகத்தியை தாராளமாக கண்டு கொண்டாடலாம்.
Comments