இந்திய அணியில் இடமில்லை.. ஒரே மேட்சில் அமெரிக்காவின் ஹீரோவான இந்திய வீரர்.. யார் இந்த சவுரப் நெத்ரவால்கர்!

  • IndiaGlitz, [Friday,June 07 2024]

இந்திய அணியில் இடம் கிடைக்காமல் மன விரக்தியில் அமெரிக்கா சென்று மேற்படிப்பு படிக்கச் சென்ற இந்திய வீரர் சவுரப் நெத்ரவால்கர், தற்போது அமெரிக்க கிரிக்கெட் அணியில் கலக்கி வருகிறார் என்பதும் நேற்று நடந்த அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அமெரிக்கா வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தவர் இவர் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஐசிசி உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளுமே 159 ரன்கள் எடுத்ததால் சூப்பர் ஓவர் வரை சென்றது என்பதும், சூப்பர் ஓவரில் அமெரிக்கா 18 ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் 13 ரன்களில் சுருண்டது என்பதால் அமெரிக்கா வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் அமெரிக்க அணிக்காக விளையாடிய இந்தியாவை சேர்ந்த சவுரப் நெத்ரவால்கர் நேற்று நடந்த ஒரே மேட்சில் ஹீரோவாகியுள்ளார். இவர் நேற்றைய போட்டியில் நான்கு ஓவர்கள் வீசி 18 ரன்களை மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார் என்பதும் சூப்பர் ஓவரிலும் இவர் சிறப்பாக பந்து வீசியதால் தான் அமெரிக்க அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை சேர்ந்த சவுரப் நெத்ரவால்கர் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த U-19 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியவர். இவருடன் அதே அணியில் விளையாடிய கேஎல் ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடித்த நிலையில் இவருக்கு மட்டும் இடம் கிடைக்கவில்லை. இதனால் மனவிரக்தியில் சவுரப் நெத்ரவால்கர் அமெரிக்கா சென்று மேல் படித்துக் கொண்டிருந்த நிலையில் தான் அங்கு பகுதி நேரமாக கிரிக்கெட் விளையாடினார்.

அவரது சிறப்பான ஆட்டத்தால் ஆட்டத்தை கவனித்த அமெரிக்க கிரிக்கெட் வாரியம் அவரை தங்கள் நாட்டு அணியில் இடம்பெற செய்தது. 2018 ஆம் ஆண்டு நடந்த சில போட்டிகளில் சவுரப் நெத்ரவால்கர் கேப்டன் ஆகவும் செயல்பட்டுள்ளார். இந்த நிலையில் நேற்றைய ஒரே போட்டியில் அமெரிக்கா முழுவதும் பிரபலம் ஆகிவிட்ட சவுரப் நெத்ரவால்கர், அடுத்ததாக இதே தொடரில் இந்திய அணியையும் எதிர்கொள்ள உள்ளார், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் அமெரிக்காவுக்காக சிறப்பாக விளையாடுவேன் என்றும் அவர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.