பாகிஸ்தானுக்கு பகிரங்க ஆதரவு கொடுக்கின்றதா சவுதி அரேபியா?
- IndiaGlitz, [Monday,February 18 2019]
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பு சமீபத்தில் காஷ்மீர் புலவாமா பகுதியில் நடத்திய கொடூர தாக்குதலுக்கு இந்திய தலைவர்கள் மட்டுமின்றி உலக தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உலகின் பல நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தும் பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்தும் வருகின்றன.
இந்த நிலையில் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200% வரி என இந்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தான் நாட்டின் வருமானம் பெருமளவு குறைந்து பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் என கருதப்பட்டது.
ஆனால் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானை சந்தித்த சவுதி அரேபிய இளவரசர் சல்மான், அந்நாட்டு அரசுடன் 20 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான 8 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் கடும் நிதி நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தானுக்கு, இந்த ஒப்பந்தங்கள் பெருமளவு உதவும் என கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் நெருக்கமான நாடு என்றும், பாகிஸ்தானுடன் உறவு தொடரும் என்றும் சவுதி இளவரசர் அறிவித்துள்ளார்.
சவுதி அரேபியா இளவரசரின் இந்த அறிவிப்பு பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத செயலுக்கு ஆதரவு அளிப்பது போல் இருப்பதாக கருதப்படுகிறது.