தமிழகத்தில் சனி, ஞாயிறு லாக்டவுனா? பெரும் பரபரப்பு!

  • IndiaGlitz, [Friday,April 16 2021]

தமிழகத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் முழுஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி கொண்டே செல்கிறது. தமிழகத்தில் தினமும் 8 ஆயிரம் பேர்களும் சென்னையில் மட்டும் சுமார் 2000 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

இந்த நிலையில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் தலைமையில் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இது குறித்து அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஆறு மாதங்களுக்கு மேலாக தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது என்பது தெரிந்ததே. அதேபோல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் அனைவர் மனதிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.