சாட்டை துரைமுருகனை பழி வாங்கும் நோக்கில் அரசு செயல்படுகிறது.....! சீமான் காட்டம்....!
Send us your feedback to audioarticles@vaarta.com
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு, தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் தம்பி ‘சாட்டை’ துரைமுருகனை வெளிவராதவாறு சிறைப்படுத்துகிறது. திமுக அரசு பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது. இது சனநாயகத்துக்கும், கருத்துரிமைக்கும் எதிராக உள்ளது என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் தம்பி ‘சாட்டை’ துரைமுருகன் அவர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அடுத்தடுத்துத் தொடரப்பட்ட தொடர் வழக்குகளின் விளைவாக, ஏறத்தாழ 50 நாட்களாகச் சிறைப்படுத்தப்பட்டிருப்பது சனநாயகத்துக்கு எதிரான அரசியல் பழிவாங்குதல் போக்காகும். அடுத்தடுத்துத் தொடரப்பட்ட 4 வழக்குகளில் 3 வழக்குகளில் பிணை கிடைத்துவிட்ட நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் மட்டும் பிணை மறுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, தஞ்சாவூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டு நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர்கள் தொடர்ச்சியாகச் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவதூறு வழக்கு எனும் நிலையிலுள்ள இவ்வழக்கில் நீதிமன்றத்தால் இந்நேரம் பிணை வழங்கப்பட்டிருக்க வேண்டிய சூழலில், கடுமையான அரசியல் அழுத்தங்களின் காரணமாகப் பிணை வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருவது பெரிதும் நம்பிக்கை கொண்டிருக்கிற நீதித்துறையின் செயல்பாடுகளின் மீது மிகப்பெரிய ஏமாற்றத்தைத் தருகிறது. இந்தப் பிணை மனு மீதான விசாரணையில் கடுமையான அழுத்தங்களைத் தந்து வரும் அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்ற ஊழியர்களாகச் செயல்படாது, ஆளுங்கட்சியின் ஊதுகுழலாகச் செயல்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது.
இப்படி மாற்றுக்கருத்து கொண்டோரை, அரசியல் விமர்சனம் செய்பவரை தொடர் சிறைவாசம் மூலமாகச் சித்ரவதை செய்து தனக்கு எதிராக எதிர்க்கருத்து எழக்கூடாது என்கின்ற ஆளும் திமுக அரசின் பாசிசப் போக்கினால் சனநாயக மாண்புகளும், அரசமைப்புச் சட்டமும் தந்து இருக்கக்கூடிய கருத்துரிமையும் மிகப்பெரிய ஆபத்தைச் சந்தித்திருக்கிறது. சனநாயக விழுமியங்களின் மீது பற்றுறுதி கொண்ட வர்கள் இதுபோன்ற கருத்துரிமைக்கு எதிரான ஆளும் கட்சியின் கொடுங்கோல் போக்கிற்கு எதிராகக் குரல் கொடுக்க சனநாயக ஆற்றல்கள் அணிதிரள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
இதற்குப் பின்னரும், பிணை மனு மீதான விசாரணையில் கடுமையான அழுத்தங்களை தமிழக அரசு தருமாயின் சனநாயகத்தைக் காப்பாற்ற, கருத்துரிமையைக் காக்க தம்பி ‘சாட்டை’ துரைமுருகன் அவர்களை விடுதலை செய்யக்கோரி, தமிழ்த்தேசிய இயக்கங்களையும் சனநாயக ஆற்றல்களையும் ஒன்றுதிரட்டி மாபெரும் போராட்டங்களை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என தமிழ்நாடு அரசை எச்சரிக்கிறேன்" என்று கூறப்பட்டிருந்தது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தமிழ்த்தேசிய ஊடகவியலாளர் தம்பி 'சாட்டை' துரைமுருகன் மீது அடுத்தடுத்துப் புனைவு வழக்குகள் தொடர்ந்து, பிணையில் வெளிவராதவாறு தொடர்ச்சியாகச் சிறைப்படுத்தும் திமுக அரசின் பழிவாங்கும் போக்கு சனநாயகத்துக்கும் கருத்துரிமைக்கும் எதிரானது! pic.twitter.com/un3O2GKnof
— சீமான் (@SeemanOfficial) July 28, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments