ஒரு குடும்பம் என்னை தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே இருக்கு: சத்யராஜ் 

  • IndiaGlitz, [Sunday,December 01 2019]

கார்த்தி, ஜோதிகா நடித்த ’தம்பி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் இந்த விழாவில் நடிகர் சத்யராஜ் பேசும்போது சிவகுமார் குடும்பம் தன்னை தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே இருப்பதாக தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் இந்த விழாவில் பேசியதாவது ’சிவகுமார் குடும்பம் தான் என்னை தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே இருக்கின்றது. நடிகர் சிவகுமார் போன்று நல்ல நடிகராக இருக்க முடியுமா என்ற பயம், அவர் மாதிரி பிள்ளைகளை நன்றாக வளர்க்க முடியுமா என்ற பயம், இப்படி தொடர்ந்து அந்த குடும்பம் என்னை போன்ற பலரையும் பயமுறுத்திக் கொண்டே இருக்கின்றார்கள்.

இந்த படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் ’பாபநாசம்’ படத்தை மூன்று மொழிகளிலும் நான் பார்த்தேன். அதன் பின்னர் அவரிடம் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அப்போதுதான் ’தம்பி’ படத்தில் இந்த வாய்ப்பு கிடைத்தது.

பொதுவாக ஒரு நல்ல அப்பா கேரக்டர் என்றால் அந்த கேரக்டரில் நடிக்க எனக்கு பிடிக்காது. ஏனெனில் அந்த கேரக்டரில் நடிப்பதற்கு எந்த ஸ்கோப்பும் இருக்காது. ஆனால் இந்த படத்தில் உள்ள அப்பா கேரக்டர் அனைத்து விதமான அம்சங்களையும் பொருந்தி இருந்ததால் இந்த படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொண்டேன்.

பாகுபலி படத்திற்கு பின்னர் எனக்கு கிடைத்த வித்தியாசமான கேரக்டர் இந்த படத்தில்தான் கிடைத்தது. அதனால்தான் சில நேரங்களில் அதிகமாக இன்வால்வ் ஆகி ஓவராக நடித்து விடுவேன். அப்போதெல்லாம் இயக்குனர் ஜீத்து ஜோசப் அப்படி எல்லாம் செய்ய வேண்டாம் நான் சொன்னதை மட்டும் செய்யுங்கள் போதும் என்று என்னை கட்டுப்படுத்தி வைப்பார். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு எனது நன்றிகள். இவ்வாறு சத்யராஜ் பேசினார்.