மோடி வாழ்க்கை வரலாறு படத்தை இவர்கள் இயக்கினால் நன்றாக இருக்கும்: சத்யராஜின் தரமான பதில்..!

  • IndiaGlitz, [Wednesday,May 29 2024]

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மோடியின் கேரக்டரில் சத்யராஜ் நடிக்க இருப்பதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் செய்திகள் பரவிய நிலையில் இன்று நடந்த ’மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது இதற்கு சத்யராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

செய்தியாளர் ஒருவர் ரஜினிகாந்த் நடிக்கும் ’கூலி’ படத்தில் நடிக்கிறீர்களா? சல்மான் கான் படத்தில் வில்லனாக நடிக்கிறீர்களா? மற்றும் கருப்பு சட்டை போட்ட நீங்கள் காவி சட்டை தலைவரின் படத்தில் நடிக்கிறீர்களா? ஆகிய மூன்று கேள்விகள் கேட்கப்பட்டன.

இதற்கு பதில் அளித்த சத்யராஜ், ரஜினி அவர்களின் ’கூலி’ படத்தில் நான் நடிக்கிறேன் என்பது உறுதி செய்கிறேன் என்று கூறினார். மேலும் சல்மான் கான் படத்தில் நடிக்கிறேனா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியாது. ஒப்பந்தப்படி இந்த படத்தில் நடிப்பவர்களின் விவரங்களை தயாரிப்பு நிறுவனம் தான் சொல்ல வேண்டும், அதனால் நான் முந்திரி கோட்டை மாதிரி சொன்னால் என் மீது கேஸ் போட்டு விடுவார்கள்’ என்றும் தெரிவித்தார்.

அதன் பின்னர் பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிப்பதற்கு தன்னிடம் யாரும் இதுவரை அணுகவில்லை என்று கூறிய அவர் அதே நேரத்தில் மோடி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை எனது நண்பர் மணிவண்ணன் போன்றவர்கள் இயக்கினால் உண்மையாக இருக்கும் என்று கூறினார். மேலும் இந்த படத்தை விஜய் மில்டன், வெற்றிமாறன், பா ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்கள் இயக்கினால் நன்றாக இருக்கும் என்றும் அவர் பதில் கூறியுள்ளார்.