நேற்று ஒரே நாளில் மறைந்த 2 நடிகர்களின் அம்மாக்கள்.. திரையுலக பிரபலங்கள் இரங்கல்..!

  • IndiaGlitz, [Saturday,August 12 2023]

நேற்று ஒரே நாளில் இரண்டு நடிகர்களின் அம்மாக்கள் காலமானதையடுத்து திரை உலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் நேற்று காலமானார். அவரது வயது 94. இவர் வயது மூப்பின் காரணமாக காலமானார் என்று கூறப்படுகிறது.

கோவையில் வசித்து வந்த சத்யராஜின் அம்மா நாதாம்பாள் காளிங்கராயர் நேற்று மாலை 4 மணிக்கு காலமான நிலையில் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த சத்யராஜுக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர் ஹைதராபாத்தில் இருந்து கோவைக்கு வந்து தனது அம்மாவுக்கு இறுதிச்சடங்கை செய்து வருகிறார். நாதாம்பாள் காளிங்கராயர் அவர்களுக்கு சத்யராஜ் என்ற மகனும் கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சத்யராஜின் தாயார் மறைவுக்கு உலக நாயகன் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், ‘நண்பர் சத்யராஜ் அவர்களின் தாயாரும், இளவல் சிபி சத்யராஜ் அவர்களின் பாட்டியுமான திருமதி. நாதாம்பாள் காளிங்கராயர் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். அன்னையை இழந்து வாடும் அவருக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

அதேபோல் நேற்று நடிகர் வாசு விக்ரம் தாயார் லலிதாம்பாள் காலமானார். 83 வயதான இவர் வயது மூப்பு காரணமாக நேற்று இரவு 7 மணிக்கு காலமானார்,. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சுடுகாட்டில் இன்று அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளது. நடிகர் வாசு விக்ரம் தாயாரான லலிதாம்பாள் மறைந்த நடிகர் எம்ஆர் ராதாவின் மகன் எம்ஆர்ஆர் வாசுவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.