12 மணி நேரத்தில் டப்பிங்: பிரபல நடிகர் செய்த சாதனை

  • IndiaGlitz, [Tuesday,December 03 2019]

ஒரு திரைப்படத்திற்கு டப்பிங் பேச ஹீரோக்கள் பொதுவாக நான்கு நாட்கள் முதல் ஒருவாரம் வரை டைம் எடுத்து கொள்வதுண்டு. ஒருசிலர் அதற்கும் மேல் டைம் எடுத்து கொள்வதுண்டு. ஆனால் பிரபல நடிகர் ஒருவர் ஒரு படம் முழுவதும் டப்பிங் செய்ய வெறும் 12 மணி நேரம் மட்டும் எடுத்துள்ளார். அவர்தான் ’தீர்ப்புகள் விற்கப்படும்’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் சத்யராஜ். இதுகுறித்து இந்த படத்தின் இயக்குனர் தீரன் கூறியதாவது:

சத்யராஜூடன் இணைந்து பணியாற்றியது எனக்கு சினிமா மீது தீர்க்க முடியாத வேட்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பிட்ட அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்ததுமே அதற்கு சத்யராஜ்தான் மிகப் பொருத்தமாக இருப்பார் என்ற முடிவுக்கு நான் வந்தேன். ஆனால் அவருடன் பணியாற்றி முடித்ததும் அவரது கடின உழைப்புக்கும், அர்பணிப்பு மிக்க நடிப்புக்கும் நான் தீவிர ரசிகனாகி விட்டேன். இதற்குக் காரணம் சினிமா மீது அவர் கொண்ட பேரார்வமும், தொழில் பக்தியும் மட்டுமல்ல, கலையையும் நடிப்பையும் அவர் உணர்வுபூர்வமாக பின்பற்றும் முறையும்தான்.

நட்சத்திரம் என்பதையும் தொழில் நெறிமுறைகளையும் தாண்டி, அவர் மிகச் சிறந்த மனிதராக படப்பிடிப்பு அரங்கில் இருக்கும் ஒவ்வொருவரையம் கவர்ந்திழுக்கிறார். அவரது அர்பணிப்பு மிக்க நடிப்பு 'தீர்ப்புகள் விற்கப்படும்' படத்தின் மிகப் பெரிய பலமாக, படத்தைத் தாங்கி நிற்கும் தூணாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

படத்தின் டப்பிங் பணிகளையும் முழுமையாக முடித்து விட்டோம். சத்யராஜ் சார் தனது டப்பிங் பணிகளை பனிரெண்டு மணி நேரத்தில் முடித்து எங்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். படம் முழு வடிவம் பெற்றிருக்கும் விதம் குறித்து நாங்கள் மிகவும் மகிழச்சியோடு இருக்கிறோம். வெகு விரைவில் டீஸர் வெளியிடும் தேதியை அறிவிக்க இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.