நடிகர் சத்யராஜூக்கு வேல்ஸ் பல்கலை அளித்த கெளரவம்

  • IndiaGlitz, [Friday,March 03 2017]

சென்னை அருகேயுள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருக்கும் ஐசரி கணேஷ், நடிகர்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் தற்போது பிரபல நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு இந்த பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்து கெளரவித்துள்ளது.

இன்று வேல்ஸ் பல்கலை வளாகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நடிகர் சத்யராஜ் உள்பட பலருக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்து கெளரவிக்கப்பட்டது.

கடந்த 1978ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த 'சட்டம் என் கையில்' படத்தில் வில்லனுக்கு அடியாள் என்ற கேரக்டரில் தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்த சத்யராஜ், சிவாஜிகணெசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்தார். பின்னர் 1990களில் ஹீரோவாகி அமைதிப்படை, நடிகன், வால்டர் வெற்றிவேல், உள்பட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் சுமார் 200 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ள சத்யராஜ், கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த 'பாகுபலி' படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்றார்.

இன்று கெளரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ள சத்யராஜூக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.