அஜித், தனுஷ் பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி?

  • IndiaGlitz, [Monday,January 27 2020]

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த ’மீசையை முறுக்கு’ மற்றும் ‘நட்பே துணை’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் வசூல் அளவில் நல்ல வெற்றியைப் பெற்றது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது அவர் நடித்து முடித்துள்ள ’நான் சிரித்தால்’ என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதால் இந்தப் படமும் வெற்றிபெற்று ஹிப்ஹாப் தமிழாவுக்கு ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் இதுவரை சுந்தர் சி அவர்களின் பேனரில் மட்டும் நடித்து வந்த ஹிப் ஹாப் தமிழா ஆதி தற்போது பிரபல தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அஜித் நடித்த ’விவேகம்’ ’விசுவாசம்’ போன்ற படங்களையும் சமீபத்தில் வெளியான தனுஷ் நடித்த பட்டாஸ்’ திரைப்படம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தான் ஹிப் ஹாப் தமிழா ஆதி ஒரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் இந்த படத்தை ஒரு புதுமுக இயக்குனர் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்க இருப்பதாகவும் விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது