'என்றென்றும் புன்னகையுடன் த்ரிஷா. பிறந்த நாள் சிறப்பு கட்டுரை

  • IndiaGlitz, [Thursday,May 04 2017]


கோலிவுட் திரையுலகில் ஒரு நடிகை ஐந்து முதல் பத்து படங்களுக்கு நாயகியாக தாக்கு பிடிப்பதே பெரிய விஷயம் இந்த நிலையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்கள், தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக நாயகியாக வலம் வருவதோடு, இன்றைய முன்னணி நாயகிகளுக்கு இணையாக கைவசம் படங்கள் வைத்திருக்கும் பிசியான நடிகை த்ரிஷா. அவர் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படித்த சர்ச் பார்க் கான்வெண்டில் படித்த த்ரிஷா, கடந்த 1999ஆம் ஆண்டு 16 வயதிலேயே 'மிஸ் சென்னை' பட்டம் வென்றார். அதன் பின்னர் அதே ஆண்டு 'ஜோடி' படத்தில் சிம்ரனின் தோழிகளில் ஒருவராக கோலிவுட்டில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் மூன்று வருட இடைவெளிக்கு பின்னர் சூர்யாவுடன் 'மெளனம் பேசியதே', 'மனசெல்லாம்' ஆகிய படங்களில் த்ரிஷா நடித்திருந்தாலும் அவரை தமிழ்சினிமா அடையாளம் காட்டியது ஹரியின் 'சாமி'. 2003ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் சூப்பர் ஹிட் ஆக, அதன் பின்னர் த்ரிஷாவுக்கு ஏறுமுகம்தான். தற்போது 14 வருடம் கழித்து உருவாகவுள்ள 'சாமி 2' படத்திலும் த்ரிஷா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

'சாமி' படத்தை தொடர்ந்து த்ரிஷாவை முன்னணி நடிகைகளின் பட்டியலுக்கு கொண்டு சென்ற படங்கள் 'கில்லி', மற்றும் 'திருப்பாச்சி'. இந்த இரண்டு படங்களும் அவர் இளையதளபதி விஜய்யுடன் இணைந்து நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் த்ரிஷாவின் முழு திறமையும் வெளிப்பட காரணமான 'அபியும் நானும்' திரைப்படம் அவருக்கு நல்ல பெய்ரை வாங்கி கொடுத்தது. த்ரிஷாவுக்கு மறக்க முடியாத இன்னொரு படமாக அமைந்தது 'விண்ணை தாண்டி வருவாயா'. ஜெஸ்ஸி என்ற கேரக்டரை இன்னும் மறக்க முடியாது. இந்த படம் வெளிவந்த காலத்தில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஜெஸ்ஸி என்ற பெயரை வைத்ததாக செய்திகள் வெளிவந்தன. அதேபோல் அஹ்மது இயக்கத்தில் ஜீவாவுடன் த்ரிஷா நடித்த 'என்றென்றும் புன்னகை' படத்தின் ப்ரியா கேரக்டரும் இன்னும் பலரது மனதில் இருக்கும். இந்த படத்தின் தலைப்பை போலவே இன்று அவர் என்றென்றும் புன்னகையுடன் இளமையுடனும் இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தல அஜித்துடன் ஏற்கனவே 'கிரீடம்' படத்தில் நடித்திருந்த த்ரிஷா, கடந்த 2011ஆம் ஆண்டு 'மங்காத்தா' படத்திலும், 2015ஆம் ஆண்டு 'என்னை அறிந்தால்' படத்திலும் மீண்டும் இணைந்து நடித்தார். இந்த இரண்டு படங்களுமே அவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனுடன் 'மன்மதன் அம்பு', 'தூங்காவனம் ஆகிய இரண்டு படங்களில் நடித்த த்ரிஷா, விக்ரமுடன் 'பீமா', தனுஷுடன் 'கொடி', ஜெயம்ரவியுடன் 'பூலோகம்', 'சகலகலா வல்லவன்', 'ஆர்யாவுடன் 'சர்வம், 'விஷாலுடன் 'சமர்', என கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்துவிட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தில் மட்டும் இன்னும் த்ரிஷா அவருக்கு ஜோடியாக நடிக்கவில்லை. வெகுவிரைவில் அந்த ஒரு வாய்ப்பையும் த்ரிஷா பெறுவார் என்று இந்த இனிய பிறந்த நாளில் வாழ்த்துகிறோம்

த்ரிஷா தற்போது 'மோகினி', கர்ஜனை', '1818', ஆகிய நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும், அரவிந்தசாமியுடன் 'சதுரங்க வேட்டை 2', விஜய்சேதுபதியுடன் '96', ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

நடிகை த்ரிஷா நடிப்பில் மட்டுமின்றி சமூக சேவையிலும் மிகுந்த ஈடுபாடு உள்ளவர். குறிப்பாக விலங்குகள் நலனுக்காக அக்கறை செலுத்துபவர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது மிகுந்த மரியாதை வைத்துள்ள த்ரிஷா, அவரது வாழ்க்கை வரலாறு படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க வேண்டும் என்று தனது ஆசையை சமீபத்தில் தெரிவித்தார். அவரது ஆசை விரைவில் நிறைவேறவும், கோலிவுட் மட்டுமின்றி இந்திய துறையுலகில் த்ரிஷா இன்னும் பல வெற்றிகள் குவிக்கவும், இந்த பிறந்த நாளில் அவருக்கு மீண்டும் நம்முடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்