close
Choose your channels

Sathriyan Review

Review by IndiaGlitz [ Friday, June 9, 2017 • தமிழ் ]
Sathriyan Review
Banner:
Sathya Jyothi Films
Cast:
Vikram Prabhu,Manjhima Mohan, Aishwarya Dutta,
Direction:
S.R. Prabhakaran
Production:
T. G. Thiyagarajan
Music:
Yuvan Shankar

’சுந்தரபாண்டியன்’, ’இது கதிர்வேலன் காதல்’ படங்களுக்குப் பிறகு, இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் சற்று நீண்ட இடைவெளிவிட்டு இயக்கியிருக்கும் திரைப்படம் ‘சத்ரியன்’. ஒரு வெற்றிப் படத்தைக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விக்ரம் பிரபு இதில் நாயகனாக நடித்துள்ளார். படம் எப்படி இருக்கிறது என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.

திருச்சியில் மிகவும் செல்வாக்கு வாய்ந்த தாதாவாக இருக்கும் சமுத்திரம் (சரத் லோகிதஸ்வா)  கொல்லப்படுகிறார். அவரைக் கொன்ற சங்கர் (அருள்தாஸ்) உள்ளூர் அமைச்சரின் ஆதரவுடன் செல்வாக்கு மிக்க தாதாவாக வருகிறான். சமுத்திரத்தின் குழுவில் இருக்கும்  குணா (விக்ரம் பிரபு) அவரது மறைவுக்குப் பின் அடுத்த இடத்தில் இருக்கும் ரவி (விஜயமுருகன்) இடம் மிகவும் விஸ்வாசமாக இருக்கிறான். ரவியும் குணாவை அடியாளைப் போல் அல்லாமல் சொந்த தம்பி போல் நடத்துகிறான்.

சமுத்திரத்தின் மகள் நிரஞ்சனா (மஞ்சிமா மோகன்) கல்லூரிக்குச் செல்கையில் அவளை ரவுடிகளிடமிருந்து பாதுகாக்க குணாவை அனுப்புகிறான் ரவி. தினமும் பார்ப்பதன் மூலம் குணா மீது காதல்வயப்படுகிறாள் நிரஞ்சனா. தொடக்கத்தில் மறுத்துவிட்டு பிறகு குணாவும் நிரஞ்சனாவைக் காதலிக்கத் தொடங்குகிறான். ரவுடி வாழ்க்கையை விட்டுவிட்டு நிரஞ்சனாவுடன் அமைதியான குடும்ப வாழ்க்கை வாழ முடிவெடுக்கிறான்.

ஆனால் சமுத்திரத்தின் மனைவி, மகன் மற்றும் ரவி ஆகியோர் இந்தக் காதலை எதிர்க்கின்றனர். ரவி இதற்காக குணாவைக் கொல்லவும் தீர்மானிக்கிறான். ஆனால் குணாவோ  காதலில் தீவிரமாக இருக்கிறான். அதற்காக ரவியைப் பகைத்துக்கொள்கிறான். மறுபுறம் பழைய பகை ஒன்றுக்கு ப்பழிதீர்க்க குணாவைக் கொல்லத் தீட்டமிடுகிறான் சங்கர்.

தனியாளான குணா, இந்த இரண்டு ரவுடிக் குழுக்களிடமிருந்து தப்பித்தானா, அவனது காதல் என்ன ஆனது என்பவை மீதிக் திரைக்கதையில் சொல்லப்படுகின்றன.

ஒரு ரவுடி காதலுக்காகத் திருந்தி வாழ முயல்வதும் அதனால் விளையும் எதிர்ப்புகளை சமாளிப்பதும்தான் கதை. இது பல படங்களில் வந்த கதைதான் என்றாலும் கதை பழையதாக இருப்பது பிரச்சனை அல்ல. திரைகக்தை புதிதாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தால் போதும். ‘சத்ரியன்’ படத்தின் திரைக்கதை அப்படி இருக்கிறதா என்றால் பாதி இருக்கிறது பாதி இல்லை என்றுதான் சொல்ல வேண்டியிருக்கும்.

படத்தின் முதல் அரைமணிநேரக் காட்சிகள் அசத்தலாக உள்ளன. அடுத்தடுத்த நிகழ்வுகள் நாம் ஊகிப்பதற்கு மாறானதாக இருந்து ஆச்சரியங்களைத் தருகின்றன. இதனால் ஏற்படும் சுவாரஸ்யம் ஒரு கட்டத்துக்கு மேல் நீர்த்துப் போகத் தொடங்குகிறது. இருந்தாலும் முதல் பாதி பெருமளவில் கவனித்துப் பார்க்கும்படியே அமைந்துள்ளது.

இரண்டாம் பாதியில்தான் சறுக்கத் தொடங்குகிறது. பெரும்பாலான காட்சிகள் மிக மெதுவாக நகர்கின்றன.அழுத்தமாகவோ புதிதாகவோ ஒன்றும் இல்லை. நாயகன், மிகப் பெரும் ரவுடிகளை வெல்லும் அல்லது அவர்களிடமிருந்து தப்பிக்கும் காட்சிகள் நம்பகத்தன்மயுடனோ புதுமையாகவோ காட்சிப்படுத்தப்படவில்லை, நாயகனின் வீர பராக்கிரமம் பற்றி வசனங்கள் வருகின்றன தவிர காட்சிகளாக ஒன்றும் இல்லை.

இருந்தாலும் படத்தின் இரண்டு பாதிகளும் ஆங்காங்கே சில ரசிக்க வைக்கும் காட்சிகள் இருக்கின்றன. நிரஞ்சனாவைத் திருமணம் செய்துகொள்ள சம்மதம் கேட்டு அவள் வீட்டுக்கு குணா செல்லும் காட்சியும் அங்கு நிகழும் சம்பவங்களும் இதற்கு உதாரணம். நாயகன் மனம் மாறும் விதம் ஏற்றுக்கொள்ளும்படி காட்டப்பட்டுள்ளது. அதற்கேற்றபடி நாயகியின் பாத்திரத்துக்கு தகுந்த முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. நாயகியின் காதலை அவளது குடும்பத்தார் எதிர்ப்பதற்கான காரணமும் ஏற்கக் கூடியதாக உள்ளது.
ஒட்டுமொத்தப் படத்தில் வன்முறை, ரவுடியிசம் ஆகியவற்றுக்கு எதிரான செய்தி அழுத்தமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதற்கு பிரபாகரனின் கூர்மையான வசனங்கள் பெரிதும் உதவுகின்றன.

விக்ரம் பிரபு வழக்கம்போல் ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக செய்திருக்கிறார். மற்ற விஷயங்களிலும் கதாபாத்திரத்துக்குத் தேவையானதைத் தருகிறார். மஞ்சிமா மோகன், தோற்றத்திலும் உடைகளிலும் திருச்சியைச் சேர்ந்த பெண்ணைக் கண் முன் நிறுத்துகிறார். பாத்திரத்தின் தேவையை உணர்ந்து நன்றாக நடித்திருக்கிறார். ஆனால் வசன உச்சரிப்பில் மலையாள வாடை. மஞ்சிமாவின் அம்மாவாக வரும் தாரா நன்றாக நடித்திருக்கிறார்.  அவரது வசன உச்சரிப்பும் தமிழுக்கு அந்நியமானதாக இருக்கிறது.

அருள்தாஸ், விஜய்முருகன், காவல்துறை அதிகாரியாக வரும் ஆடுகளம் நரேன், நாயகியின் கோழை அண்ணனாக வரும் செளந்தர் ஆகியோர் தங்கள் பங்கை சரியாகச் செய்திருக்கிறார்கள். நாயகனின் திடீர் நண்பனாக வரும் கவின், நெல்லைத் தமிழ் பேசி மனதில் பதிகிறார். ஆனால் அவருக்கு என்று ஒரு காதல் டிராக் எதற்கு என்றே தெரியவில்லை. அதற்கும் படத்தின் கதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவரது காதலியாக வரும் ஐஸ்வர்யா தத்தாவுக்கு படத்தில் எந்தப் பங்கும் இல்லை. அதேபோல் இரண்டே இரண்டு காட்சிகளுக்கு யோகிபாபு வீணடிக்கப்பட்டிருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்தின் மிகப் பெரிய பலம். ஆக்‌ஷன் காட்சிகளில் வரும் தீம் மியூசிக் சிறப்பாக உள்ளது. பாடல்கள் கேட்கும்படி உள்ளன. படத்தில் இரண்டே இரண்டு பாடல்கள் மட்டுமே வருவது ஆறுதல். சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு திருச்சியை அதன் அசலான முகத்துடன் பதிவுசெய்கிறது. அன்பறிவ் இணையர் வடிவமைத்த சண்டைக் காட்சிகள் சுமார்தான்.

மொத்தத்தில் ‘சத்ரியன்’ திரைக்கதை கோளாறுகளைத் தாண்டி படத்தின் நல்ல காட்சிகள், அழுத்தமான வசனங்கள், வன்முறைக்கு எதிரான மெசேஜ், பின்னணி இசை, ஆகியவற்றுக்காகப் பார்க்கலாம்.

Rating: 2.5 / 5.0

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment

Showcase your talent to millions!!

Write about topics that interest you - anything from movies to cricket, gadgets to startups.
SUBMIT ARTICLE