நடந்ததை எங்கும் சொல்ல தயார்: சாத்தான்குளம் காவலர் ரேவதி
- IndiaGlitz, [Wednesday,July 01 2020]
சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவர் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரை ஐகோர்ட் கிளை தானாக முன்வந்து இந்த வழக்கை ஏற்று நடத்துவதும் இந்த வழக்கு குறித்து அதிரடியாக சில உத்தரவு பிறப்பித்ததும், இந்த உத்தரவு காரணமாக சில காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர் என்பதும் ஒருசிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கின் விசாரணை மதுரை ஐகோர்ட்டில் நடைபெற்றபோது சாத்தான்குளம் தலைமை காவலர் ரேவதி அவர்கள் கூறிய சாட்சி, இந்த வழக்கில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் அவர்களிடம் காவலர் ரேவதி கூறிய சாட்சி இந்த வழக்கிக்ல் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பவ தினத்தில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் என்ன நடந்தது என்பதை விரிவாக காவலர் ரேவதி கூறியுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த காவலர் ரேவதி, ‘நான் என் மனசாட்சிப்படி காவல் நிலைத்தில் என்ன நடந்ததோ அதை கூறினேன் என்றும், இதை எங்கே வேண்டுமானாலும் கூற தயாராக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய தண்டனை வழங்குவது குறித்து நீதிமன்றம் தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார். மேலும் தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். தலைமை காவலர் ரேவதியின் இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது