சாத்தான்குளம் கொலை வழக்கு: CBI க்கு ஏன் அத்தனை சிறப்பு??? CBI விசாரணையில் என்ன வித்தியாசம்???
Send us your feedback to audioarticles@vaarta.com
சாத்தான் குளம் (ஜெயராஜ், பின்னிக்ஸ்) கொலை வழக்கு விசாரணை தற்போது சி.பி.ஐ. க்கு மாற்றப் பட்டு இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. இதனால் வழக்கில் ஏற்படப்போகும் திருப்பம் என்ன? மதுரை உயர் நீதிமன்றக் கிளை இந்த வழக்கில் தானாக முன்வந்து விசாரித்த போது சம்பந்தபட்ட காவலர்கள் காட்டிய மழுப்பங்களுக்கு விடைக் கிடைக்குமா? என்பது போன்ற பல்வேறு எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு இடையில் சி.பி.சி.ஐ.டி இடைக்காலமாக இந்த வழக்கை விசாரிக்கலாம் என மதுரை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்ததன் பேரில் தற்போது வழக்குத் தொடர்பான தடயங்கள் கைப்பற்றப்பட்டு சம்பந்த பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
சாத்தான்குளம் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்ட பின்பு வழக்கில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு காவல் துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்கு முகாந்திரம் இருப்பதாக அவர்கள் அறிக்கை வெளியிட்டனர். அதன் அடிப்படையில் 6 போலீஸார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப் பட்டது. அதைத் தொடர்ந்து தற்போது கைது நடவடிக்கைகளும் தொடர்ந்து கொண்டு வருகின்றன. வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்ட பின்பு பிரேதசப் பரிசோதனை மேற்கொள்ளப் பட்டு இறந்தவர்களின் உடலில் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப் பட்டது.
காவல் துறையினர் வசம் இருந்த லத்திகள் கைப்பற்றப் பட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டன. அதோடு முக்கியத் திருப்பமாக தலைமை பெண் காவலர் ரேவதி நேரடி சாட்சியத்தையும் நீதிமன்றத்தில் கொடுத்து இருக்கிறார். இப்படி பல்வேறு திருப்பங்களை சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் கொண்டு வந்து இருக்கின்றனர். இதற்காக சி.பி.சி.ஐ.டி சார்பில் 12 தனிப்படைகள் அமைக்கப் பட்டு இருக்கிறது என்பதும் குறிப்பிடப் பட்டு இருக்கிறது. ஆனாலும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளை விடவும் சி.பி.ஐ அதிகாரிகளுக்கு எப்போது மவுசு அதிகமாகவே இருக்கிறது. இதற்கு அடிப்படை காரணம் அவர்களுக்கு இருக்கும் அதிகார வரம்பு என்றால் அது மிகையாகாது.
சி.பி.சி.ஐ.டி. × சி.பி.ஐ வித்தியாசம் என்ன?
இந்தியாவில் முக்கிய வழக்குகள் என்றால் அது சி.பி.ஐக்கு மாற்றப்படுவது வழக்கம். அல்லது ஒரு வழக்கில் முறையான விசாரணை நடைபெற வில்லை என்று மக்கள் கருதும் பட்சத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு கோரிக்கை வைக்கப் படுகிறது. ஒரு மாநிலத்தின் உயர் நீதிமன்றமோ அல்லது உச்சநீதி மன்றமோ எப்போது வேண்டுமானாலும் ஒரு வழக்கை சி.பி.ஐக்கு மாற்றலாம். இப்படி மாற்றப்பட்ட பெரும்பாலான வழக்குகளை சி.பி.ஐ முறையான விசாரணை நடத்தி முடித்து கொடுத்து இருக்கிறது. சில நேரங்களில் சி.பி.ஐ அதிகாரிகளும் விலை போகிறார்கள் என்ற குற்றச் சாட்டு தொடரத்தான் செய்கிறது. ஆனாலும் இருக்கிற அமைப்பிலேயே சி.பி.ஐ நடுநிலைத் தன்மைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.
இத்தனை பெருமைக்கும் காரணம் சி.பி.ஐக்கு இருக்கும் அதிகார வரம்பு. பொதுவாக CBI அமைப்பு வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்போது தனிநபர்களைத்தான் அதிகாரியாக அமர்த்துகிறது. அப்படி அமர்த்தப்படும் அதிகாரிகள் மாநில சி.பி.சி.ஐ.டி க்களைப் போன்று ஒவ்வொரு விசாரணைக்கும் அனுமதி பெற வேண்டியதில்லை. உட்கார்ந்த இடத்தில் இருந்தே தேவைப்படும் அனைத்து விவரங்களையும் மிக எளிதாகப் பெற்றுக்கொள்ளலாம். ஒரு வழக்கில் தொடர்புடைய யாரை வேண்டுமானாலும் விசாரிக்க அவர்களுக்கு அதிகாரம் உண்டு.
ஆனால் மாநில அளவில் இருக்கும் சிறப்பு புலனாய்வு அமைப்பு மாநில வரம்புக்குள் மட்டுமே செயல்பட முடியும். மாநிலத்தின் சட்ட ஒழுங்கை கட்டிக்காக்கவே பெரும்பாலும் அவர்கள் பயன்படுத்தப் படுகிறார்கள். சி.பி.சி.ஐ.டி யை விட பல மடங்கு பெரிய அமைப்பாக மத்திய சிறப்பு புலனாய்வு அமைப்பு (CBI) செயல்படுகிறது. ஆனால் இந்திய குற்ற வழக்கை பொறுத்தவரை அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான் என்பதால் அவ்வபோது நெருக்கடியும் ஏற்படுவது இயல்பாக இருக்கிறது.
CBI அதிகாரிகள் வேறு சில விஷயங்களிலும் திறமை வாய்ந்தவர்களாக கருதப்படுகின்றனர். மற்ற காவல் துறையினரை விட மாற்றி யோசிக்கும் பயிற்சி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால்தான் சில சமயங்களில் CBI ஒரு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்போது எங்கிருந்து வழக்கை ஆரம்பிக்கிறார்கள் எனக் கண்டுபிடிப்பது சிரமமாயிருக்கிறது. மேலும் வழக்கில் சம்பந்தப் பட்டவர்கள் உயர் அதிகாரிகளாக இருந்தாலும் சரி, எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் சரி... எளிதாக அவர்களிடம் விசாரணை நடத்த CBI க்கு அதிகாரம் இருக்கிறது. இதுவே சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளாக இருந்தால் முறையான அனுமதி பெற வேண்டும். அப்படி அனுமதி பெறாமல் வழக்கு விசாரணைக்கு செல்லும்போது சில உயர் பதவியில் இருப்பவர்கள் என்னுடைய வக்கீலை பாருங்க... என்று எளிதாகச் சொல்லிவிட்டு சென்று விடலாம். ஆனால் CBI அதிகாரிகளிடம் இப்படி சொல்ல முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
1963 ஆம் ஆண்டு CBI அமைப்புக்கு டெல்லி சிறப்பு காவல் சட்டம் வரையறுக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து 1964 ஆம் ஆண்டு அவர்களின் அதிகாரத்தை விரிவாக்கும் பொருட்டு சட்டப் பிரிவு 6 இல் சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அதன் அடிப்படையில் வழக்குக்கு தொடர்பு இருக்கும் பட்சத்தில் CBI அதிகாரிகள் மத்திய அரசுக்கு நேரடி தொடர்புடைய யாராக இருந்தாலும் அவர்களாகவே விசாரணை நடத்தலாம். அந்த விசாரணைக்கு அனுமதியே தேவையில்லை. ஆனால் மாநில அரசுகளோடு தொடர்புடைய அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வேண்டுமென்றால் மாநில அரசுகளிடம் அனுமதி பெற்றே விசாரணை நடத்த வேண்டும். ஆனால் நம்முடைய மாநில சிறப்பு புலனாய்வு அமைப்புகள் ஒவ்வொரு விசாரணைக்கும் முறையான அனுமதி பெற்ற பிறகே விசாணையைத் தொடங்க முடியும். ஆனால் CBI அதிகாரிகளுக்கு அப்படி இல்லை. அனுமதி வாங்கும் நேரத்தில் அவர்கள் மொத்த விசாரணையும் முடித்து விடுவார்கள் என்பதுதான் சிறப்பாகக் கருதப்படுகிறது.
இப்படி CBI க்கு அதிகபடியான அதிகாரத்தை வழங்கி இருப்பதால் மாநிலத்தில் சுயவுரிமை பறிக்கப் படுவதாக சில நேரங்களில் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. மேற்கு வங்க முதல்வர் மம்தா CBI அமைப்பை எதிர்த்து தர்ணா போராட்டங்களிலும் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சில மாநிலங்களில் CBI விசாரணைக்கு தடையும் விதிக்கப் பட்டு இருக்கிறது. அந்த மாநிலங்களில் அனைத்து வழக்குகளையும் மாநில காவல் அதிகாரிகளே விசாரித்துக் கொள்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாத்தான்குளம் கொலை வழக்கு தற்போது உலகம் முழுவதும் பரபரப்பாக மாற்றப்படும் விவகாரமாக மாறியிருக்கிறது. முதன் முதலில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட போது முதல் எஃப்ஐஆர் அறிக்கையில் “காவல் துறையினர் கைது செய்ய முற்பட்டபோது இருவரும் தரையில் உருண்டு புரண்டதால்தான் உடல் உறுப்புகளில் காயங்கள் ஏற்பட்டது” என எழுதப்பட்டு இருந்தது. அதே வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை செய்து கொலை வழக்காக மாற்றியிருக்கிறார்கள்.
மேலும் மாநில காவல் துறையினரே நேரடியாகச் சம்பந்தப் பட்ட வழக்கு என்பதால் விசாரணை முறையாக இருக்குமா என்ற சந்தேகமும் ஒருபக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டு சம்பந்தம் இல்லாத மூன்றாவது நபர் இந்த வழக்கு விசாரணையை நடத்துவதுதான் முறையாக இருக்கும் என்ற குரலும் வலுத்து வருகிறது. இந்த அடிப்படையில் CBI விசாரணையே சரியானது என்று பல தரப்புகளில் கூறப்பட்டு வருகிறது. ஜெய்ராஜ் மற்றும் பென்னிக்ஸை தவிர இன்று காலை குமரேசன் என்ற ஆட்டோ டிரைவரும் போலீஸ் தாக்குதலால் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே வழக்கு விசாரணையில் மேலும் திருப்பங்களை எதிர்ப்பார்க்கலாம் என்றே கூறப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments