சாத்தான்குளம் வழக்கு: மதுரை ஐகோர்ட்டின் அடுத்தடுத்த அதிரடி உத்தரவுகளால் பரபரப்பு
- IndiaGlitz, [Tuesday,June 30 2020]
சாத்தான்குளம் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உடலில் காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளதால் போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் சாத்தான்குளம் சம்பவம் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஏற்று நடத்தினால் தாமதம் ஏற்படும் என கருத்து தெரிவித்த ஐகோர்ட் கிளை நீதிபதிகள், தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு விசாரணை தாமதம் இல்லாமல் நடைபெற வேண்டும் என்றும் தெரிவித்தனர். ஆனால் அதே நேரத்தில் சிபிசிஐடி வசம் வழக்கை ஒப்படைக்க நீதிமன்றத்துக்கு ஆட்சேபனை இல்லை என்றும் தெரிவித்தனர். டிஐஜி ஒருவர் தலைமையில் சிறப்பு குழு அமைத்து இந்த வழக்கை விசாரணை நடத்த வேண்டும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டை அவமதித்தது குறித்து, ‘மன அழுத்தத்தின் காரணமாக காவலர்கள் தவறு செய்துவிட்டதாக அரசு தரப்பு விளக்கம் விளக்கம் அளித்தது. மேலும் சாத்தான்குளம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் போலீசாரின் நடவடிக்கைகளுக்காக அரசு வழக்கறிஞர் இன்று நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
முன்னதாக இந்த வழக்கின் விசாரணையின்போது தூத்துக்குடி எஸ்பி அருண் பாலகோபாலன், ஏடிஎஸ்பி குமார், டிஎஸ்பி பிரதாபன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். மேலும் நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் மற்றும் நீதிபதியை மிரட்டிய புகாருக்கு உள்ளான சாத்தான்குளம் காவலர் மகாராஜனும் நீதிமன்றத்தில் ஆஜராகினர் என்பது குறிப்பிடத்தக்கது