இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் கைது: பட்டாசு வெடித்து கொண்டாடிய சாத்தான்குளம் பொதுமக்கள்
- IndiaGlitz, [Thursday,July 02 2020]
சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் குறித்த வழக்கு சிபிசிஐடி கைவசம் கொண்ட பின்னர் பல அதிரடி நடவடிக்கைகளை அடுத்தடுத்து எடுத்து வருவதை பார்த்து வருகிறோம். இந்த வழக்கில் நேற்று ஆறு பேர்கள் மீது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது என்பதும் நேற்றிரவே சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் கைது செய்யப்பட்டார் என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இன்று காலை சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் மற்றும் காவலர் முத்து ராஜ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் சாத்தான்குளத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த ஸ்ரீதரிடமும் விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்து அவரை தேடி வந்தனர். சற்று முன்னர் சிபிசிஐடி போலீஸாரிடம் ஸ்ரீதர் சிக்கியதாகவும் அவர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் விசாரணையின் முடிவில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் சித்திரவதை வழக்கில் அடுத்தடுத்து கைது நடவடிக்கைகள் தொடர்வதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் நிச்சயம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது மேலும் சிபிசிஐடி போலீசாரின் அதிரடி நடவடிக்கைகளுக்கு சாத்தான்குளம் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருவதோடு கைது நடவடிக்கையை ஆதரித்து பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது