தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் லாக்-அப் மரணம் கிடையாது: அமைச்சர் கடம்பூர் ராஜூ
- IndiaGlitz, [Sunday,June 28 2020]
சாத்தான்குளத்தில் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரம் லாக்-அப் மரணம் கிடையாது என்றும், கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட 2 நாட்களுக்கு பின்னரே இருவரும் உயிரிழந்தனர் என்றும், காவல்நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்தால் மட்டுமே லாக்-அப் டெத் என்று பெயர்
என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
ஊரடங்கை மீறி குறிப்பிட்ட நேரத்திற்கும் மேல் கடையைத் திறந்து வைத்ததாக கூறி சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் கடந்த 19ஆம் தேதி காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை கைது செய்த போலீஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் திடீரென அடுத்தடுத்து இருவரும் உயிரிழந்தனர்.
தந்தை மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் திரையுலகினர் உள்பட பலர் கொந்தளித்து, அமெரிக்காவின் ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்துடன் ஒப்பிட்டனர்.
இந்நிலையில் சாத்தான்குளம் விவகாரம் லாக்கப் மரணம் கிடையாது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, ‘காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்தால் மட்டுமே அதற்கு லாக்கப் டெத் என்று பெயர். ஆனால் சாத்தான்குளம் விவகாரத்தில் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு, நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு அதன்பின்னர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதன் பின் 2 நாளைக்கு பின்னர் தான் அவர்கள் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தமிழக முதல்வர் குற்றஞ்சாட்டப்பட்ட காவலர்களை பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து வழக்கினை எடுத்துள்ளது. உடற்கூறு ஆய்வு முதல் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.
மேலும் சாத்தான்குளம் விவகாரத்தினை தேர்தல் வாக்கு வங்கிற்காக எதிர்க்கட்சிகள் அரசியல் செய்து வருவதாகவும், நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்கிறதோ அதுதான் கடைசியில் உண்மையாக இருக்கும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.