'தாரை தப்பட்டை' திரைவிமர்சனம்
Send us your feedback to audioarticles@vaarta.com
'தாரை தப்பட்டை' - சசிகுமார்-வரலட்சுமியின் ஆட்ட சாம்ராஜ்யம்
சேது, நந்தா, பிதாமகன், பரதேசி என பார்வையாளர்களை மிரட்டும் அளவுக்கு படமெடுத்து தேசியவிருதும் பெற்றவர் இயக்குனர் பாலா. இயக்குனர் மேதையான பாலாவுடன் இசை மேதை இளையராஜா இணைகிறார் என்ற செய்தி வந்த நொடியில் 'தாரை தப்பட்டை' படத்திற்கு ஏற்பட்ட எதிர்பார்ப்பு மிகப்பெரியதாக இருந்தது. அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்த்த இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்பதை பார்ப்போம்
புலவர் சாமி என்பவர் கிராமித்திய கலை அனைத்தையும் கற்ற மாமேதை. ஆனா எந்நேரமும் பாட்டிலும் கையுமாகத்தான் இருப்பார். அவருடைய ஒரே மகன் சசிகுமாருக்கு தன்னுடைய கலைகள் அனைத்தையும் கற்று கொடுத்துள்ளார். ஆனாலும் கிராமிய இசையால் பெரிய வருமானம் இல்லாமல் இசைக்குழு வைத்திருக்கும் சசிகுமார் குரூப் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், அந்தமானுக்கு இசை கச்சேரி நடத்த ஒரு வாய்ப்பு வருகிறது.
சசிகுமார், அவரை காதலிக்கும் வரவலட்சுமி மற்றும் இசைக்குழுவினர் அந்தமான் செல்கின்றனர். சென்ற இடத்தில் இசைக்கச்சேரி முடித்தவுடன் இசைக்கச்சேரிக்கு அழைத்து வந்தவர் வரலட்சுமியை தவறான நோக்கத்துடன் அணுகியபோது அடிதடி ஏற்படுகிறது. இந்த கோபத்தில் இசைக்கச்சேரியை புக் செய்தவர் சசிகுமார் குரூப்பில் உள்ள அனைவரின் கப்பல் டிக்கெட்டையும் கிழித்துவிடுகிறார். பின்னர் கஷ்டப்பட்டு பணம் திரட்டி ஊர் வந்து சேர்கின்றனர்.
இந்நிலையில் வரலட்சுமியின் ஆட்டத்தை தொடர்ந்து பார்த்து வரும் கலெக்டர் ஒருவரின் டிரைவர் என்று கூறிக்கொண்டு வரும் ஆர்.கே.சுரேஷ், வரலட்சுமியை திருமணம் செய்ய விரும்புவதாக அவருடைய அம்மாவிடம் உருகி கேட்கிறார். வரலட்சுமியின் அம்மா, தனது மகளுக்கு நல்ல வரன் வந்திருப்பதாக சசிகுமாரிடம் கூறி தயவுசெய்து காதலை மறந்துவிடும்படி கெஞ்சி கேட்டுக்கொள்கிறார். சரியான வருமானம் இல்லாத தன்னுடன் வரலட்சுமி வாழ்வதைவிட அரசு வேலையுள்ள ஒருவரை வரலட்சுமியை திருமணம் செய்துகொண்டால், அவருடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று முடிவு செய்யும் சசிகுமார், வரலட்சுமியின் மனதை மாற்றி ஆர்.கே.சுரேஷுக்கு திருமணம் செய்து வைக்கின்றார்.
முதலிரவு அன்றுதான் ஆர்.கே.சுரேஷின் உண்மை சுயரூபம் வரலட்சுமிக்கு தெரிகிறது. இதனால் வரலட்சுமி வாழ்க்கை என்ன ஆனது? வரலட்சுமியின் வாழ்க்கையை சசிகுமார் சரிசெய்தாரா? என்பதுதான் மீதிக்கதை.
முதல்முறையாக சசிகுமார் நட்பு வசனம் பேசாமல் நடித்துள்ளார். முதல்பாதியில் வரலட்சுமியை மிரட்டினாலும் உள்ளுக்குள் காதலை வைத்து கொண்டிருப்பதை நளினமாக வெளிப்படுத்தியுள்ளார். தந்தையிடம் கோபமும், தந்தை இறந்த பின் காட்டும் பாசமும், வரலட்சுமியை இன்னொருக்கு கட்டிக்கொடுக்கும்போது கண்ணீர் விடுவதிலும் மனதை உருக்குகிறார். சசிகுமாரின் நடிப்பை கிட்டத்தட்ட முழுமையாக கொண்டு வந்துவிட்டார் பாலா.
இந்த படத்தின் முதல் பாதியின் ஹீரோ வரலட்சுமிதான். சரியான ரெளடிப்பெண் கேரக்டர். சத்தியமாக இந்த கேரக்டருக்கு இவரை விட்டால் இப்போதிருக்கும் நடிகை யாருமே பொருந்த மாட்டார்கள் என்பது உண்மை. மாமனாருடன் உட்கார்ந்து கொண்டு தண்ணி அடிப்பது, சசிகுமாரிடம் மாமா மாமா என்று உறுகுவது, மாமனின் பசியை போக்க அம்மணமாக கூட ஆடுவேன் என்று கண்ணீருடன் சொல்வது, என்று முதல் பாதியில் எல்லோரையும் பின்னுக்கு தள்ளிவிடுகிறார் வரலட்சுமி. குறிப்பாக வரலட்சுமியின் டான்ஸ். நிஜமான ஆட்டகாரிகூட இந்தளவுக்கு இயல்பாக ஆடுவாரா? என்பது சந்தேகமே. வரலட்சுமிக்கு வாழ்த்துக்கள்
முதல் பாதியில் பதுங்கும் பூனையாகவும், பிற்பாதியில் பாயும் புலியாகவும் உள்ள வில்லன் கேரக்டர் ஆர்.கே.சுரேஷ். இவருடைய பின்னணி இப்படித்தான் இருக்கும் என்பதை ஓரளவுக்கு முதல் பாதியிலேயே யூகிக்க முடிகிறது. ஏனென்றால் இது பாலா படம்.
முதல் பாதியில் வரலட்சுமியை ஹீரோபோல் உபயோகப்படுத்திய பாலா, இரண்டாவது பாதியில் கிட்டத்தட்ட சுத்தமாக அவரை மறந்துவிட்டு திரைக்கதை அமைத்தது ஏன்? என்று தெரியவில்லை. வரலட்சுமி இல்லாத இரண்டாவது பாதி வெறும் குடமாக உள்ளது. மேலும் இரண்டாவது பாதியில் மெயின் கதையை விட்டு பாலா விலகி சென்றுவிடுகிறார். திருமணத்திற்கு பின்னர் வரலட்சுமி எப்படி இருக்கின்றார் என்று ஒருவருடமாக நினைக்காமல் எப்படி இருந்திருப்பார்? என்பதுபோன்ற ஏராளமான லாஜிக் மீறல் இரண்டாவது பாதியில் உள்ளது. மேலும் இந்த படத்தை சுகமாக முடிக்க அதிக வாய்ப்பு இருந்தும் வேண்டுமென்றே பாலா சோக முடிவை திணித்ததுபோலும் உள்ளது.
இந்த படத்தின் நிஜமான ஹீரோ இசைஞானிதான். ஆங்காங்கே வரும் பாடல்களும், பின்னணி இசையையும் விமர்சிக்க வார்த்தைகளே இல்லை. கிராமிய இசையை இசைஞானியை தவிர வேறு யாராலும் இந்த அளவுக்கு இனிமையாக தர முடியாது.
செழியனின் ஒளிப்பதிவு, ஜி.சசிகுமாரின் படத்தொகுப்பு ஆகியவை கச்சிதம்.
இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'ஏ' சர்டிபிகேட் கொடுத்தது சரிதான் என்பது படத்தின் கடைசி 20 நிமிடங்களை பார்ப்பவர்களுக்கு புரியும். நடுங்க வைக்கும் அளவுக்கு ரத்தமும் சதையும் கலந்த சண்டைக்காட்சி. வயிற்றில் உள்ள குழந்தையை, போஸ்ட்மார்ட்டம் செய்பவர் அறுத்து எடுக்கின்றார் போன்ற கொடூரமான கற்பனை பாலாவை தவிர வேறு யாருக்கும் வர வாய்ப்பில்லை.
எந்த ஆட்டக்காரன் தான் நல்லா வாழ்ந்திருக்கான்? இல்ல நிம்மதியா செத்திருக்கான், ஆட்டக்காரியோட ஆட்டத்தை யார் பார்க்குறா? ஆள் எப்படி இருக்குறான்னுதான்ன பார்க்குறாங்க, நீதான் மாமா எனக்கு சாமி, இந்த கல்லு மண்ணெல்லாம் எனக்கு தேவையில்லை, போன்ற அழுத்தமான வசனங்கள் படத்தில் உள்ளது.
இரண்டாவது பாதியில் மெயின் கதையில் இருந்து விலகாமல், வரலட்சுமியை இன்னும் அதிகமாக பாலா பயன்படுத்தியிருந்தால் இந்த படம் இன்னொரு சேதுவாகவோ, பிதாமகனாகவோ, பரதேசியாகவோ இருந்திருக்கும்.
மொத்தத்தில் 'தாரை தப்பட்டை' முதல்பாதி வரலட்சுமிக்காக ஒருமுறை பார்க்கலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout