சசிகலா பதவியேற்பு விழா திடீர் ரத்து. காரணம் என்ன?

  • IndiaGlitz, [Tuesday,February 07 2017]

தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை திரும்புவார் என்றும், சசிகலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்|றும் கூறப்பட்ட நிலையில் அவருடைய தமிழக வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால் சசிகலா பதவியேற்பது எப்போது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

நேற்று முன் தினம் அதிமுக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா‌ இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்று கூறப்பட்டது. இதற்காக, சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த பணிகளை அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.

பதவியேற்பு விழாவுக்கான பாதூகாப்பு ஏற்பாடுகளை சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்நிலையில், கவர்னரின் தமிழக வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சசிகலா இன்று பதவியேற்க வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.

டெல்லியில் அட்டர்னி ஜெனரலுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த கவர்னர் வித்யாசாகர்ராவ் அங்கிருந்து நேராக மும்பை சென்றுவிட்டதாகவும், ஊட்டியில் இருந்த அவருடைய குடும்பத்தினர்களும் மும்பை சென்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கவர்னரின் தமிழக வருகை திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சசிகலா தரப்பு அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.