சசிகலாவின் முதல் பேச்சு : ஜெயலலிதா காட்டிய வழியில் ராணுவ கட்டுப்பாட்டுடன் செயல்படுவோம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா இன்று முறைப்படி அந்த பதவியை ஏற்று கொண்டார். பின்னர் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலா பேசியதாவது:
"தலைமைக்கழக நிர்வாகிகளே, அமைச்சர் பெருமக்களே, மாவட்டச் செயலாளர்களே, நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களே, கழகத்தின் பல்வேறு நிர்வாகிகளே, அனைத்து உடன் பிறப்புக்களே உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம். என்னைப் பொதுச் செயலாளராக தேர்வு செய்த நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி.
அதிமுக தொண்டர்களுக்கு எல்லாமுமாய் திகழ்ந்தவர் ஜெயலலிதா. ஆயிரம் ஆயிரம் கூட்டங்களுக்கு ஜெயலலிதாவுடன் நான் சென்றிருக்கிறேன். ஆனால் இன்று.. (அப்போது சசிகலா கண்ணீர் வடித்தார்). 33 ஆண்டுகளில் ஜெயலலிதா இல்லாமல் பங்கேற்பது முதல் நிகழ்ச்சி என்பதால் வருத்தம் அளிக்கிறது. ஜெயலலிதாவை மீ்ட்டெடுக்க 75 நாட்கள் கடுமையாக போராடினோம். உலகத்தரம் வாய்ந்த மருத்துவர்களை அழைத்து சிகிச்சை அளித்தோம். ஜெயலலிதாவின் மறைவு கற்பனையிலும் நினைக்காத ஒன்று. எனது வார்த்தையை கற்பனையிலும் நினைத்திராத ஒன்று.
நல்ல உடல்நிலை தேறி வந்தநிலையில் ஜெயலலிதா மரணம் நிகழ்ந்துவிட்டது. எனது வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தேவதையில்லாத அரசியல் மாடம் களையிழந்துவிட்டது. ஜெயலலிதாவின் அரசியல் பிரசேவம் பெண் இனத்திற்கு பெருமை சேர்த்தது. எனது 29-வது வயதில் இருந்து ஜெயலலிதாவுடன் இருந்துள்ளேன். ஜெயலலிதா காட்டிய வழியில் ராணுவ கட்டுப்பாட்டுடன் செயல்படுவோம்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் கொண்டாடப்படும். எம்ஜிஆர் உருவம் பொறித்த நாணயம், அஞ்சல் தலை வெளியிட மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று முழக்கமிட்ட அம்மாவின் வழியில் நம் பயணத்தை தொடருவோம். உங்கள் அன்புக் கட்டளையை ஏற்கின்ற கட்டாயமும், கடமையும் எனக்கு இருக்கிறது. எனக்கு அம்மா தான் எல்லாம். அம்மாவின் கழகமே எனது உலகம். கோடான கோடி கழக கண்மணிக்களுக்காகவும் நான் மீதம் உள்ள வாழ்வை கழிக்க கடமைப்பட்டிருக்கிறேன். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி அம்மா சாதி சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட தலைவர்கள். எனக்கு அம்மா தான் எல்லாம். நம்மை விமர்சிப்பவர்கள் கூட நம்மை பின்பற்றும் அளவுக்கு கழகத்தை வழிநடத்துவோம்"
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments