அதிமுக கொடியுடன் தமிழகம் நோக்கி சசிகலா… காவல் துறை வகுத்த விதிமுறைகள் என்னென்ன?
- IndiaGlitz, [Monday,February 08 2021]
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு காலம் சிறை தண்டனை பெற்ற சசிகலாவிற்கு கடைசி நேரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டபோது கடந்த 27 ஆம் தேதி சிறை தண்டனையில் இருந்து விடுதலை பெற்றார். பின்னர் தொடர்ந்து விக்டோரியா மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றவர் தற்போது கொரோனாவில் இருந்து மீண்டு தமிழகம் நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்.
இவரது வருகையை ஒட்டி அமமுக தொண்டர்கள் கடும் உற்சாகத்தில் உள்ளனர். இதற்கிடையே இன்று காலை கர்நாடகா தமிழக எல்லையான ஜுஜுவாடியில் மேளதாளத்துடன் அமமுக ஆதரவாளர்கள் சசிகலாவை வரவேற்றனர். மேலும் தமிழகம் முழுவதும் 57 இடங்களில் இவரை வரவேற்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும் செனைக்கு நுழையும் இவரை அதன் எல்லையான செம்பரபாக்கம், நசரத்பேட்டை குமணன்சாவடி, போரூர், கிண்டி, கத்திப்பாரா மற்றும் திநகர் என சென்னையில் மட்டும் 32 இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை அமமுகவினர் செய்து வைத்து இருக்கும் நிலையில் தமிழகக் காவல் துறை பல்வேறு கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் வெளியிட்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது, அவருடைய காரை 5 வாகனங்கள் மட்டுமே பின்தொடர வேண்டும். அப்படி வந்தால் இதர வாகனங்கள் வழியிலேயே நிறுத்தப்படும். பட்டாசு வெடிப்பதற்கும் பேண்ட் வாத்தியங்கள் இசைப்பதற்கும் கட்டாயம் அனுமதி இல்லை. பேனர்கள் மற்றும் தோரணங்கள் அனுமதியின்றி வைக்கக்கூடாது. இந்த விதிமுறைகளை மீறும் பட்சத்தில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி காவல்துறை கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.
ஆனால் இந்த விதிமுறைகளை மீறி சசிகலா தற்போது அதிமுக கொடி கட்டிய காரில் தமிழகத்திற்கு வந்து கொண்டு இருக்கிறார். இதனால் போலீசார் ஆங்காங்கே குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் சசிகலாவிற்கு பேணர்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் அவர் சென்னை தி நகரில் உள்ள உறவினர் கிருஷ்ணபிரியாவின் இல்லத்தில் தங்க உள்ளதாகவும் அங்கேயே செய்தியாளர்களை சந்திப்பார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிமுக கட்சியின் நிறுவனர் எம்ஜிஆரைத் தொடர்ந்து அக்கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளராக மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா செயல்பட்டு வந்தார். அவரது இறப்பிற்கு பின்பு இக்கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப் பட்டார். ஆனால் இவர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றப்பின்பு கட்சிக்குள் பல்வேறு குழப்பங்கள் முளைத்தன. இதையடுத்து கட்சிக்குள் நடந்த பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளராக தற்போது எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகக் கூட சசிகலா இல்லை என்று கட்சியின் மூத்த நிர்வாகிககள் குற்றம் சாட்டி வருகின்றனர். இப்படி இருக்கும்போது சசிகலா எப்படி அதிமுக கொடியை கட்டிக் கொள்ளலாம் எனச் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் புகார் ஒன்றும் அளிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக திருமதி சசிகலா சிறையில் இருந்து வெளியே வரும்போது எங்கள் இயக்கக் கொடியை பயன்படுத்தக் கூடாது. காரணம் அதற்கான தார்மீக உரிமை அவருக்கு இல்லை என்றும் அதிமுக சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும் சசிகலா அதிமுகவில் உறுப்பினரே இல்லை. எங்கள் கட்சியின் விதிப்படி ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை உறுப்பினர் அட்டையை புதுப்பிக்க வேண்டும். அவர் உறுப்பினர் பதவியை புதுப்பிக்கவே இல்லை. ஆகவே அவரை அதிமுகவில் இருந்து நீக்கி விட்டோமா என்ற கேள்விக்கு இங்கு இடமே இல்லை என சசிகலா குறித்து அதிமுகவினர் கருத்து வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையில் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் சசிகலா தான் எனவும் இரட்டை இலை தங்களுக்கே சொந்தம் எனவும் அமமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். மேலும் தமிழகம் நோக்கி வரும் சசிகலா தன்னுடைய காரின் முன்புறம் அதிமுக கொடியை வைத்து இருக்கிறார். இதனால் தமிழகத்தில் சர்ச்சைகள் வெடிக்கும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.