வழக்கிலிருந்து தப்பித்தார் சசிகலா

  • IndiaGlitz, [Wednesday,March 01 2017]

அதிமுக எம்பி சசிகலா புஷ்பா மீது நிர்வாண மசாஜ் புகார் கொடுத்த அவரது வீட்டு பணிப்பெண்கள் தங்களது புகாரை திடீரென வாபஸ் பெற்றுள்ளனர். ஒருசிலரின் நெருக்கடியினால்தான் தாங்கள் புகார் கொடுத்ததாக அந்த பணிப்பெண்கள் கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக எம்பி சசிகலா புஷ்பாவுக்கும், திமுக எம்பி திருச்சி சிவாவுக்கும் இடையே டெல்லி விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு கைகலப்பு நடந்தது. இந்த சம்பவம் குறித்து சசிகலா புஷ்பாவிடம் விசாரணை செய்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அவரை கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார்.

இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் பணிப்பெண்களான பானுமதி மற்றும் ஜான்சிராணி ஆகியோர் தூத்துக்குடி போலீசில் புகார் ஒன்றை கொடுத்தனர். அதில் சசிகலா புஷ்பா வீட்டில் பணிபுரிந்த போது நிர்வாண நிலையில் மசாஜ் செய்ய வேண்டும் என துன்புறுத்தியதாகவும், சசிகலா புஷ்பாவின் கணவர் மற்றும் மகனும் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகார் தன்னை பழிவாங்குவதற்காக கொடுக்கப்பட்ட பொய்ப்புகார் என்று சசிகலா புஷ்பா தெரிவித்திருந்தார்.

இந்த புகார் காரணமாக சசிகலாபுஷ்பா கைதாகும் நிலை ஏற்பட்டதால் அவர் சுப்ரீம் கோர்ட் வரை சென்று கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார். இந்நிலையில் ஜெயலலிதா மரணம் அடைந்து, அதிமுகவில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது. தற்போது புகார் கொடுத்த பணிப்பெண்கள் இருவரும் தங்கள் புகாரை வாபஸ் பெற்றது திடீர் திருப்பமாக கருதப்படுகிறது.