பொதுச்செயலாளர் பதவியை ஏற்க சம்மதம். முதல்வருடன் ஜெ. நினைவிடம் செல்கிறார் சசிகலா
- IndiaGlitz, [Thursday,December 29 2016]
இன்று காலை அதிமுக பொதுக்குழு கூடி ஒருமனதாக அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் சசிகலா என்று தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மான நகலுடன் சசிகலாவை சந்தித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அடுத்த பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுகொள்ள வேண்டும் என்று சசிகலாவிடம் கேட்டுக்கொண்டார். முதல்வருடன் மக்களவை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன், ராஜலட்சுமி ஆகியோர்களும் சசிகலாவிடம் வேண்டுகோள் வைத்தனர்.
பொதுக்குழு தீர்மானத்திற்கும், அனைவரின் விருப்பத்திற்கும் இணங்க அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ஏற்றுக் கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.,
இதுகுறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதாவது: ''பொதுக்குழு கூட்டத்தில் ஒருமனதாக நாங்கள் தீர்மானம் நிறைவேற்றி, சின்னம்மாவிடம் கொடுத்து, உங்களைத்தான் கழகத்தின் பொது செயலாளராக தேர்வு செய்துள்ளோம். நீங்கள்தான் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். அவரும் ஒப்புக் கொண்டார். அம்மா வழியில் நடந்து கழகத்தை கட்டிக் காப்பேன் என்று எங்களிடம் சின்னம்மா கூறினார். விரைவில் அவர் கழகத்தின் தலைமையகத்திற்கு வந்து கட்சிப் பொறுப்புக்களை கவனிப்பார்'' என்று கூறினார்.
இந்நிலையில் சசிகலா நடராஜன், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு நேரில் சென்று தீர்மான நகலை வைத்து, மரியாதை செலுத்த உள்ளதாக, அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.