கமல் பேட்டிக்கு வைகைசெல்வன் எதிர்ப்பு, நாஞ்சில் சம்பத் ஆதரவு.. என்ன நடக்குது சசிகலா அணியில்?
- IndiaGlitz, [Monday,March 13 2017]
உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் தமிழகத்தில் மீண்டும் சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும் என்றும் மக்கள் யாருக்காக வாக்கு அளித்தார்களோ அவர் இன்று இல்லை என்பதால் அதுவே சரியான முடிவாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு சசிகலா ஆதரவாளரும், தமிழக அமைச்சருமான வைகைச்செல்வன் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூறிய கருத்தை சற்று முன்னர் பார்த்தோம்.
இந்நிலையில் இதே பேட்டியில் கமல் கூறிய இன்னொரு கருத்துக்கு சசிகலாவின் இன்னொரு ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் ஆதரவு தெரிவித்துள்ளார். கமல் திராவிடம் குறித்து கூறிய கருத்துக்கு நாஞ்சில் சம்பத் கூறியதாவது:
தனியார் தொலைக்காட்சியில் நிரந்தர இளைஞன் என் நெஞ்சம் நிறைந்த கலைஞன் தமிழ் திரையுலகின் மார்க்கண்டேயன் நடிகர் கமலஹாசன் நேற்று திராவிட இயக்கம் குறித்து சிலாகித்து பேசியது எனக்குள் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது. தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும் வரை திராவிட இயக்கம் இருக்கும். திராவிட இயக்கம் என்பது பூகோள ரீதியிலானது என்று அவர் சொன்னது செவியில் தேனாய் விழுந்தது.
அவருடைய பரந்த பட்டறிவும் நிரம்பியநூல் அறிவும்தான் அவர் இப்படி கருத்து சொல்வதற்கு காரணம். மனோன்மணியம் தந்த பேராசிரியர் டாக்டர். சுந்தரம் பிள்ளையின் படைப்புகளை கமலஹாசன் ஆழ்ந்து வாசித்தாலும் அது குறித்து நீளயோசித்ததனாலும் இந்த கருத்தை வெளிபடுத்தியிருக்கிறார். திராவிட இயக்கம் என்பது காலத்தீயில் கருகிப் போகாத தத்துவம்...அதன் பரிணாமத்தை வெளிப்படுத்திய நடிகர் கமலஹாசனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் திராவிட இயக்க மாட்சியை வியந்து பேசிவருகிற நான் நன்றி சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
சசிகலா ஆதரவு அரசை தொடர்ந்து விமர்சித்து வரும் கமல்ஹாசனின் கருத்தை நாஞ்சில் சம்பத் பாராட்டி பதிவு செய்தது அந்த அணியினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இதேபோன்ற ஒரு பேட்டியினால்தான் நாஞ்சில் சம்பத் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.