ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா உண்ணாவிரதமா? சென்னையில் பரபரப்பு

  • IndiaGlitz, [Saturday,February 11 2017]

தமிழகத்தை ஆட்சி செய்வது யார் என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் கொண்ட ஆளுனர் வித்யாசாகர் ராவ், சென்னை வந்து இரண்டு நாட்கள் ஆகியும் எந்த முடிவையும் தெரிவிக்காமல் உள்ளார். நேற்று அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை செய்த அவர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியதாக கூறப்பட்டு பின்னர் அது மறுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக எம்.எல்.ஏக்களை சிறை வைத்து ஆளுனர் அழைப்பார் என்று காத்திருந்த சசிகலாவுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. மேலும் தன் கைவசம் உள்ள எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களும் அணி மாறி வருவதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்நிலையில் கூவத்தூருக்கு நேரடியாக சென்று எம்.எல்.ஏக்களை சமாதானம் செய்து வரும் சசிகலா, சென்னை திரும்பியவுடன் ஆளுனர் தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காவிட்டால் சென்னை மெரீனாவில் ஜெயலலிதா சமாதி அருகே உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டுள்ளதாக அதிமுக தரப்பினர் கூறுகின்றனர்.

ஏற்கனவே சென்னையில் வன்முறை ஏற்படலாம் என உளவுத்துறை கொடுத்த எச்சரிக்கையின் காரணமாக பலத்த போலீஸ் பாதுகாப்பு முக்கிய இடங்களில் போடப்பட்டுள்ள நிலையில், சசிகலா உண்ணாவிரதம் இருக்கவிருப்பதாக வந்துள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.