அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு. முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு
- IndiaGlitz, [Thursday,December 29 2016]
பெரும் பரபரப்புக்கு இடையே இன்று காலை சென்னையில் அதிமுக பொதுக்குழு கூடியது. முதல்வர் பன்னீர்செல்வம் உள்பட அதிமுகவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்குழுவில் ஜெயலலிதாவுக்கு மறைவுக்கு இரங்கல், ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா, நோபல் பரிசு விருதுகள் வழங்க வேண்டும் என்பது உள்பட 14 தீர்மானங்கள் இயற்றப்பட்டன.
இதன்பின்னர் அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஓபிஎஸ் அதிகாரபூர்வமாக அறிவித்தார். பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்குமாறு சசிகலாவிடம் வலியுறுத்த உள்ளதாகவும் முதல்வர் ஓபிஎஸ் கூறினார்.
மேலும் அதிமுக வரலாற்றில் மிக மிக முக்கியத்தும் வாய்ந்த இந்த நேரத்தில், தீய சக்திகளின் சூழ்ச்சிக்கு இடம் தராமல் கழக உடன் பிறப்புகள் அனைவரும் கட்டுக்கோப்போடும், அதிமுக இதுவரை நமக்கு அளித்திருக்கும் அனைத்துப் பெருமைகளுக்கும், அங்கீகாரங்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக தலைமைக்கு விசுவாசத்தோடும் பணியாற்றிட இந்தப் பொதுக்குழு உறுதி அளிக்கிறது. எம்ஜிஆரை புரட்சித் தலைவி அம்மா வடிவில் கண்டோம். அம்மாவை, சின்னம்மா வடிவில் கண்டு கழகப் பணிகளை தொடர்ந்து ஆற்றுவோம் என்று சூளுரைப்போம் என்று தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானத்துடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போயஸ் கார்டனில் இருக்கும் சசிகலாவை சந்திக்க புறப்பட்டுள்ளார். வரும் ஜனவரி 2ஆம் தேதி சசிகலா அதிமுகவின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.