Sarvam Thaala Mayam Review
'சர்வம் தாளமயம்' - தாளம் மட்டுமே உள்ள படம்
இயக்குனர் ராஜீவ் மேனன் இருபது வருடங்களுக்கு பின் இயக்கியுள்ள படம், அதிலும் உலக திரைப்பட விழாக்களில் இடம்பெற்று பாராட்டை குவித்த படம், ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகி எதிர்பார்ப்பை எகிற வைத்த படம் என்ற பெருமையை பெற்ற 'சர்வம் தாளமயம்' படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.
மிருதங்கம் செய்து விற்பனை செய்யும் ஏழை கிறிஸ்துவர் ஜான்சனின் (குமரவேல்) மகனான பீட்டர் (ஜிவி பிரகாஷ்) விஜய்யின் தீவிர ரசிகராக வீட்டிற்கு உபயோகம் இல்லாமால் ஊரை சுற்றி பொறுப்பின்றி இருக்கின்றார். இருப்பினும் அவருக்கு இசை மீது அதிக ஆர்வம். முறையான இசைப்பயிற்சி இல்லாவிடினும், எந்த இசையை கேட்டாலும் அதை அப்படியே திருப்பி வாசிக்கும் திறமை அவருக்கு உண்டு. இந்த நிலையில் தற்செயலாக வேம்பு ஐயரின் (நெடுமுடிவேணு)வின் மிருதங்கத்தை அருகில் இருந்து கேட்கும் வாய்ப்பை பெற்ற ஜிவி பிரகாஷ், அவரிடம் முறைப்படி மிருதங்கம் பயில முயற்சி செய்கிறார். ஒருசில நிபந்தனைகளுக்கு பின் பீட்டரை சிஷ்யராக ஏற்றுக்கொண்டு அவருக்கு மிருதங்க பயிற்சி அளித்து வரும் நிலையில் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அந்த பிரச்சனை என்ன? அதனால் பீட்டருக்கு ஏற்பட்ட விளைவுகள் என்ன? பீட்டரின் இசைகனவு நனவாகியதா? என்பதே இந்த படத்தின் மீதிக்கதை.
இந்த படத்தின் ஹீரோ, ஹீரோயின், இயக்குனர் உள்பட மற்றவர்களை பார்க்கும் முன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பற்றி குறிப்பிட வேண்டும். ஒரு இசைப்படத்திற்கு என்ன இசை வேண்டும் என்பதை அறிந்து மிக அருமையான இசையை ரஹ்மான் கொடுத்துள்ளார். குறிப்பாக மிருதங்க காட்சிகள், கர்நாடக இசைக்கச்சேரி காட்சிகள், படம் முழுவதும் பின்னணி இசை ஆகியவை மிக அருமை. 'சர்வம் தாளமயம், 'எப்ப வருமோ எங்க காலம் போன்ற பாடல்கள் ஆட்டம் போட வைக்கும் நிலையில், சின்மயி குரலில் 'மாயா மாயா' பாடலும், ஸ்ரீராம் பார்த்தசாரதி குரலில் 'வரலாமா உன்னருகில் பெறலாமா உன் அருளை' ஆகிய பாடல்கள் மனதை உருக வைக்கின்றது. மொத்தத்தில் இந்த படத்தின் உண்மையான ஹீரோ ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்று கூறினால் அது மிகையில்லை.
இந்த படத்தின் ஹீரோ பிறவிலேயே இசைஞானம் கொண்ட கேரக்டர் என்பதால் ஒரு இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷை ஹீரோவாக இயக்குனர் தேர்வு செய்துள்ளார். ஆனால் ஒரு இசையமைப்பாளராக இருந்தும் வழக்கம்போல் ஜிவி பிரகாஷ் இந்த கேரக்டரை முழுதாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. மெட்ராஸ் பையன் கேரக்டரிலும், மிருதங்க வித்வான் கேரக்டரிலும் அவருடைய நடிப்பு அவருடைய கேரக்டரை மெருகேற்றவில்லை
அபர்ணா பாலமுரளியின் சாரா கேரக்டர் சில நிமிடங்களே என்றாலும் அவர் வரும் காட்சிகள் திருப்தியாக உள்ளது. ஆனால் 'உன் உலகம் வேற என் கனவு வேற' என்று தெளிவாக ஹீரோவிடம் கூறிவிட்டு பின் திடீரென ஹீரோவை காதலிக்க என்ன காரணம் என்பதை இயக்குனர் விளக்கவில்லை. ஆனாலும் ஹீரோவை ஒவ்வொரு காட்சியிலும் அவருடைய கனவை நனவாக்க இவர் கொடுக்கும் ஊக்கம் மனதை கவர்கிறது. குறிப்பாக 'குருவை ஏன் மனிதனாக தேடுகிறாய்? இயற்கைதான் உண்மையான குரு' என்று கூறி அதற்கு விளக்கம் அளிக்கும் காட்சி சூப்பர்
நெடுமுடிவேணு, பாலாக்காடு வேம்பு ஐயராகவே மாறிவிட்டார். ஒரு உண்மையான மிருதங்க வித்வானை நடிக்க வைத்திருந்தால் கூட இந்த அளவுக்கு கச்சிதமாக நடித்திருப்பாரா? என்பது சந்தேகம்தான்.
இயக்குனர் ராதாமோகனின் ஆஸ்தான நடிகரான குமரவேல் நடிப்பும் மனதில் நிற்கும் வகையில் உள்ளது. வழக்கம்போல் மிகைப்படுத்தாத இயல்பான நடிப்பு. வினித், டிடி கேரக்டர்கள் கொஞ்சம் நெகட்டிவ்வாக அமைக்கப்பட்டுள்ளது. நடிப்பும் ஓகே
ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் ஆகிய இரண்டுமே குறை சொல்ல முடியாத அளவுக்கு ஓகே ரகம்.
இந்த படத்தின் கதை சரியாக கையாளப்பட்டிருந்தால் இதுவொரு உலகத்தரமான படமாக அமைந்திருக்கும். ஆனால் இயக்குனர் ராஜீவ் மேனன் படத்தின் மெயின் கதைக்கு சம்பந்தமில்லாத காட்சிகளை அதிகம் வைத்து அவ்வப்போது திசை திருப்பியுள்ளார். ஒரு இசைப்பயண கதையில் விஜய் ரசிகர் மன்ற காட்சிகள், கீழ்ஜாதிக்காரர்களுக்கு தனி டம்ளர் காட்சிகள் எதற்கு என்று புரியவில்லை. நாயகி திடீரென நாயகன் மீது காதல் கொள்வது எப்படி? ஒரு ஏழை மிருதங்கம் செய்யும் தொழிலாளியின் மகன் இந்தியா முழுவதும் ஆடம்பர உடையுடன் சுற்றுவதற்கு பணம் எங்கே இருந்து வந்தது? போன்ற பல லாஜிக் கேள்விகள் எழுகின்றன. மேலும் ஒரு இசைக்கலைஞன் சம்பந்தப்பட்ட படத்திற்கு இன்னொரு இசைக்கலைஞன் தான் வில்லனாக இருப்பார் என்ற 'தில்லானா மோகனாம்பாள்' காலத்து கதைதான் இதிலும் உள்ளது. பிறவியிலேயே இசைஞானம் கொண்ட ஒருவர் தனது இசைப்பயணத்தை தேடும் கதையில் ஜாதி, மதம், சினிமா நடிகனின் ரசிகன் போன்ற பிம்பங்கள் இல்லாமல் இருந்திருக்கலாம்.
இருப்பினும் தொலைக்காட்சிகளில் இசை சம்பந்தப்பட்ட போட்டிகள், அதில் பங்கேற்கு ஜட்ஜ்கள் குறித்த நக்கலான காட்சிகள் ரசிக்கும் வகையில் உள்ளது. அதேபோல் வசனங்கள் ஆங்காங்கே கைதட்டலை பெறுகின்றன.
மொத்தத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் ,பின்னணி இசை மற்றும் நெடுமுடிவேணு நடிப்புக்காகவும், கர்நாடக இசை ரசிகர்களும் இந்த படத்தை பார்க்கலாம்.
- Read in English