சரத்குமார்-இனியா அதிரடியாக மோதும் 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு'
- IndiaGlitz, [Monday,July 02 2018]
கடந்த சில நாட்களாக தூத்துகுடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சரத்குமார் நடித்து வரும் படம் ஒன்றுக்கு 'வேளச்சேரி துப்பாக்கிசூடு' என்ற டைட்டிலை படக்குழுவினர் வைத்துள்ளனர். வடமாநில இளைஞர்கள் தமிழகத்தில் செய்யும் அட்டகாசத்தை முடிவுக்கு கொண்டு வரும் ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரியின் வாழ்க்கையே இந்த படத்தின் கதை என்பதும், இந்த படத்தின் கதை ஒரு உண்மைச்சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க்கது.
வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வரும் இளைஞர்களால் பல இடங்களில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. கலாச்சார சீர்குலைவும் ஏற்படுகிறது. இப்படிப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை ஒடுக்கும் காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடித்துள்ளார். அந்த நிகழ்வுகளும் அதைச் சார்ந்த ஒரு என்கவுண்டர் ஆபரேஷனுக்கு தான் இந்த ’வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' என பெயரிட்டுள்ளனர்.
இந்தப்படத்தின் க்ளைமாக்ஸ் என்கவுண்டர் காட்சி வேளச்சேரியில் நடைபெறுவதால் இந்தப்படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என 'வேளச்சேரி துப்பாக்கிச்சூடு' என்கிற டைட்டிலை வைத்துள்ளார்களாம்..
என்கவுண்டர் துப்பாக்கி சூடு என்பது மனித உரிமை மீறல் என சொல்லக்கூடிய இனியாவுக்கும், இல்லையில்லை காவல்துறையின் செயல் நியாயமானதுதான் என்கிற சரத்குமாருக்கும் நடக்கும் விவாதங்களும் அதை சார்ந்த நிகழ்வுகளும் தான் படத்தின் அடிநாதம்.
சரத்குமார் நிறைய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தாலும், முழுக்க முழுக்க என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடிப்பது இதுதான் முதல்முறை ஆகும்..
படம் குறித்து இயக்குநர் S.T..வேந்தன் கூறும்போது, காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தால் அதை மனித உரிமை மீறல் எனச் சொல்கிறார்கள். அதேசமயம் கிரிமினல்களால் பாதிக்கப்படும் காவல்துறையினருக்காக யாரும் கொடிபிடிப்பதில்லை.. யாரும் போராடுவதில்லை.. அப்பாவிகளை கொல்லவேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல..
ஆனால் எதிர்பாராதவிதமாக அப்பாவிகளும் கொல்லப்படுகிறார்கள் என காவல்துறை பக்க நியாயத்தை சரத்குமார் பேசுவதும், மனித உரிமை ஆர்வலராக வரும் இனியா பொதுமக்களுக்கான நியாயங்களை அவர்கள் பார்வையில் பேசுவதும் என இரண்டு தரப்பினரின் வாதங்களையும் சமமாக சொல்லியிருக்கிறோம்.
இதற்கிடையே வடமாநில கொள்ளையர்கள் அட்டகாசம், இளமையான காதல் ஜோடி, என்கவுண்டர், மனித உரிமை கழக விசாரணை என மாறிமாறி பரபரப்பாக நகரும் விதமாக இதுவரை இல்லாத வகையில் திரைக்கதையை உருவாக்கி இருக்கிறோம்.. கிளைமாக்ஸ் என்கவுண்டர் முடிந்ததும் நடைபெறும் மனித உரிமை ஆணையத்தின் விசாரணை இந்தப்படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்று கூறியுள்ளார்.