அதிமுகவினர் போராட்டம் எதிரொலி: சர்கார் படக்குழு எடுத்த அதிரடி முடிவு
- IndiaGlitz, [Thursday,November 08 2018]
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒருசில காட்சிகளுக்கு ஆளும் அதிமுக கட்சியினர்களிடம் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனால் தமிழகம் முழுவதும் 'சர்கார்' திரையிட்ட தியேட்டர்கள் முன் ஆர்ப்பாட்டங்கள் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டங்களால் ஒருசில இடங்களில் காட்சிகள் ரத்தானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து சர்கார் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு ஒப்புக்கொண்டுள்ளதாக மேற்குமண்டல திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர், 'திருப்பூர்' சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியபோது, 'அதிமுக நடத்தும் போராட்டம் குறித்தும் தயாரிப்பு தரப்பிடம் விளக்கியதாகவும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இன்று இரவுக்குள் எந்தெந்த காட்சிகள் நீக்குவது என்பது குறித்து ஆலோசனை செய்து நாளை முதல் அந்த காட்சிகள் இல்லாத 'சர்கார்' திரையரங்குகளில் திரையிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் காட்சிகள் நீக்குவது குறித்து விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர்களிடம் ஆலோசனை நடத்தவில்லை என்றும், தயாரிப்பு தரப்பினர்களிடம் மட்டும் ஆலோசனை செய்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளர்.