A.R. Murugadoss has depended largely on the real-life connection to the audiences on the recent political occurrences in which he succeeds partly. The high production values that Sun Pictures is known to splashes the richness in every frame. 2018 | U/A (India)
'சர்கார்' திரைவிமர்சனம் - மெஜாரிட்டி கிடைத்த சர்கார்
தளபதி விஜய், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஏ.ஆர்.ரஹ்மான், சன் பிக்சர்ஸ் என கோலிவுட்டின் முன்னணி அம்சங்கள் அனைத்தும் நிறைந்த இந்த சர்காருக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்பை பாதி அளவு பூர்த்தி செய்வதே படக்குழுவினர்களுக்கு ஒரு பெரும் சவால். இந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை விஜய்யின் சர்கார் பூர்த்தி செய்ததா? என்பதை பார்ப்போம்.
அமெரிக்காவின் முன்னணி ஐடி நிறுவனமான ஜி.எல். நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் ராமசாமி (விஜய்), சென்னை வருவதால் இந்தியாவின் அனைத்து முன்னணி நிறுவனங்களும் அச்சம் கொள்கின்றன. ஆனால் தான் தமிழக சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போட வந்ததாகவும், மாலையே மீண்டும் அமெரிக்கா திரும்பி விடுவதாக விஜய் கூறுவதால் அந்நிறுவனங்கள் நிம்மதி அடைகின்றன. இந்த நிலையில் தன்னுடைய ஓட்டை கள்ள ஓட்டு போட்டுவிட்டதாக தேர்தல் அதிகாரிகள் கூறியதுடன் நீதிமன்றத்திற்கு செல்லும் விஜய், 49P என்ற பிரிவு குறித்து அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு தேவை என்று நீதிமன்றத்தில் வலியுறுத்தியதால் அவருடைய வாக்கை பதிவு செய்யும் வரை தேர்தல் முடிவை ஒத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது விஜய் போலவே கள்ள ஓட்டால் பாதிக்கப்படும் லட்சக்கணக்கானோர்களும் திடீரென நீதிமன்றம் சென்றதால் ஒட்டுமொத்த தேர்தலே ரத்து செய்யப்படுகிறது. இதனால் ஆத்திரமடையும் ஆளுங்கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகளும், அதனை தனது கார்ப்பரே மூளையால் சமாளிக்கும் விஜய்க்கும் இடையே நடைபெறும் அரசியல் சதுரங்க ஆட்டம் தான் இந்த படத்தின் மீதிக்கதை.
தளபதி விஜய் வழக்கம்போல் ஆக்சன் மற்றும் நடன காட்சிகளில் ரசிகர்களுக்கு விருந்தளிக்கின்றார். கார்ப்பரேட் சி.இ.ஓ கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்துவதிலேயே பாதி வெற்றி கிடைத்து விடுகிறது. ஆனால் வாயை அதிகம் திறக்காமல் நக்கலுடன் கூடிய வசனம் பேசும் விஜய் பாணி இந்த படத்தில் மிஸ்ஸிங். ஓவர் ஆக்சன் ஆங்காங்கே தெரிவதும் ஒரு மைனஸ். ஒரு அமெரிக்க ரிட்டன் போல் நடந்து கொள்ளாமல் இரண்டு கைகளையும் அவ்வப்போது விரித்து கொண்டு தர லோக்கல் அளவு இறங்கி அடிப்பதும், சீறிப்பாயும் வசனம் பேசும் பாணியும் செயற்கையாக உள்ளது. இருப்பினும் இந்த படத்தை மொத்தமாக தனது தோளில் தாங்குவது இவரது கேரக்டர்தான் என்பதை மறுக்க முடியாது.
கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் நாயகி என்பதை தவிர வேறு எதுவுமே இல்லை. பாவம் இவரை இயக்குனர் ஒரு ஓரமாகவே எல்லா காட்சிகளிலும் நிற்க வைத்துவிட்டார். ஒரே ஒரு சுமாரான டூயட் பாடலுடன் திருப்தி அடைகிறார் கீர்த்திசுரேஷ்.
வரலட்சுமிக்கு 'சண்டக்கோழி 2' படத்திற்கு பின் மீண்டும் ஒரு நெகட்டிவ் கேரக்டர். ஒரு கார்ப்பரேட் கிரிமினலை சமாளிக்க கருவிலே கிரிமினலாக இருக்கும் வரலட்சுமி போடும் திட்டங்கள், அரசியலில் வெற்றி பெற சொந்த அப்பா, அம்மாவையே பணயம் வைக்கும் கொடூரம் என நடிப்பில் ஒரு படி மேலே போகிறார் வரலட்சுமி. குறிப்பாக விஜய்யுடன் வரலட்சுமி மோதும் இரண்டு காட்சிகளும் மாஸ்
முதலமைச்சர் மற்றும் அமைச்சர் கேரக்டர்களுக்கு கச்சிதமாக பழ.கருப்பையாவும், ராதாரவியும் பொருந்தினாலும், வரலட்சுமிக்கு தலையாட்டும் பொம்மைகளாக இருவரது கேரக்டர்களும் உருவாக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றம் தருகிறது. யோகிபாபு ஒருசில காட்சிகளில் தோன்றினாலும் காமெடிக்கு கியாரண்டியாக உள்ள காட்சிகள்.
ஜெயமோகனின் தற்கால அரசியல் வசனங்கள், ஓட்டுரிமையின் முக்கியத்துவம் குறித்த வசனாங்கள் கைதட்டலை பெறுகிறது. குறிப்பாக 'திருடனை பிடிப்பது மட்டும் சட்டத்தின் வேலை இல்லை. திருடப்பட்ட பொருளை உரியவர்களிடம் திருப்பி சேர்ப்பதும் சட்டத்தின் கடமைதான்', 'நம் நாட்டில் பிரச்சனைக்கு தீர்வு தேவையில்லை. மக்களை திசைதிருப்ப இன்னொரு பிரச்சனை போதும்', ;நெகடிவ்வா சொன்னால்தான் ஒரு விஷயம் மக்களை போய்ச்சேருகிறது', 'எதிர்க்க ஆளே இல்லை என்று இறுமாப்புடன் இருப்பதுதான் ஜனநாயகத்தின் முதல் பலவீனம் ஆகிய வசனங்கள் சிந்திக்க வைக்கின்றது.
இசையமைப்பாளார் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் சிம்டாங்காரன், ஒரு விரல் புரட்சி இரண்டு பாடல்கள் ஓகே. பின்னணி இசை ரொம்ப சுமார்.
ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரனின் கேமிரா சூப்பர். குறிப்பாக கூட்டம் கூட்டமாக இருக்கும் காட்சிகளில் அவரது உழைப்பு திரையில் தெரிகிறது. எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தின் பணியும் சிறப்பு. ராம்-லட்சுமண் ஆக்சன் காட்சிகள் தெறிக்க வைக்கின்றது.
இரண்டே வரிக்கதையில் நாலைந்து மாஸ் காட்சிகள், தற்கால அரசியலை மறைமுகமாக தாக்கும் ஒருசில காட்சிகளை வைத்து இரண்டே முக்கால் மணி நேர படத்தை தேற்றிவிட்டார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். அவரது முந்தைய படங்களை ஒப்பிடும்போது திரைக்கதையில் விறுவிறுப்பு குறைவு. இரண்டாம் பாதியில் நம்பகத்தன்மையற்ற காட்சிகள் அதிகம். குறிப்பாக ஒரே வாரத்தில் 234 தொகுதிகளிலும் திடீரென அமெரிக்காவில் இருந்து வரும் ஒருவர் புகழ் பெறுவது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத காட்சி. விஜய் ரசிகர்கள் மட்டுமே ரசிக்கும் வகையில் காட்சிகளும் திரைக்கதையும் அமைத்துள்ளார் இயக்குனர். படம் வெளியான இரண்டு நாட்களுக்கு பின் படத்தை காப்பாற்றுவது குழந்தைகள், பெண்களும் தான். ஆனால் இவர்களுக்கான காட்சிகள் இந்த படத்தில் ரொம்ப குறைவு.
மொத்தத்தில் வலுவான மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்க வேண்டிய இந்த சர்கார்' நூலிழையில் ஆட்சியை தக்க வைத்துள்ளது.
Comments