லண்டனில் இருந்து சென்னைக்கு வாக்களிக்க வந்த நபர்.. விஜய் படக்காட்சி மாதிரியே ஏற்பட்ட சோகம்..
- IndiaGlitz, [Friday,April 19 2024]
லண்டனில் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செய்து சென்னைக்கு ஓட்டு போட வந்தவருக்கு விஜய் படத்தில் நிகழ்ந்த காட்சி மாதிரியே ஏற்பட்ட சோகம் குறித்த செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழகத்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது என்பதும் காலை 7:00 மணி முதல் வாக்குப்பதிவு நடந்த நிலையில் அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர் என்பதையும் காலையிலிருந்து பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் வாக்களிப்பதற்காக சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு சென்றனர் என்பதும் பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழ்நாட்டு மக்கள் கூட வாக்களிப்பதற்காக தமிழகத்திற்கு வந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் சென்னையை சேர்ந்த 67 வயது பால்ராஜ் என்பவர் லண்டனில் இருக்கும் நிலையில் அவர் தனது வாக்கை பதிவு செய்வதற்காக லண்டனில் இருந்து ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செய்து சென்னை வந்தார்.
ஆனால் அவர் வாக்கு சாவடிக்கு வாக்களிக்க சென்ற போது அவருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பதால் அவர் வாக்களிக்க முடியாது என தேர்தல் அதிகாரி கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தேர்தல் அதிகாரியிடம் கடந்த முறை வாக்களித்தேன், இந்த முறை எப்படி எனக்கு வாக்கு இல்லை என்று சொல்லலாம் என்று வாக்குவாதம் செய்தார். இருப்பினும் வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் இல்லாததால் அவர் வாக்களிக்காமல் திரும்பி சோகமாக சென்றார் என்று கூறப்படுகிறது.
விஜய் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான ’சர்கார்’ திரைப்படத்தில் லட்சக்கணக்கில் செலவு செய்து வெளிநாட்டில் இருந்து தனது வாக்கை செலுத்துவதற்காக விஜய் வரும் காட்சியும், ஆனால் அவரது ஓட்டை வேறொருவர் போட்டுவிட்டதால் ஏற்படும் பிரச்சனை தான் அந்த படத்தின் கதையாக இருக்கும் என்பது தெரிந்ததே. அதேபோல் லண்டனில் இருந்து நிஜமாகவே சென்னைக்கு ஓட்டு போடுவதற்காக வந்தவருக்கு ஏற்பட்ட சோகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.