சோலார் பேனல் வழக்கு. பெண் தொழிலதிபர் சரிதா நாயருக்கு 3 ஆண்டு ஜெயில்
- IndiaGlitz, [Friday,December 16 2016]
முன்னாள் கேரள முதலமைச்சர் உம்மண்சாண்டி உள்பட பல விவிஐபிக்கள் சம்பந்தப்பட்டதாக கூறப்பட்ட சோலார் பேனல் மோசடி வழக்கில் தொழிலதிபர் சரிதா நாயருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக பிரபல கேரள பெண் தொழிலதிபர் சரிதாநாயர் மீது கடந்த 2013ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்த மோசடியில் அன்றைய கேரள முதல்வர் உம்மண் சாண்டியும் உடந்தை என்று கூறப்பட்டது. இதன் காரணமாக உம்மன் சாண்டியின் உதவியாளர்கள், அலுவலக பணியாளர்கள் ஒருசிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் சோலார் பேனல் மோசடி நிரூபணம் ஆகியுள்ளதால் தொழிலதிபர் சரிதா நாயர் மற்றும் அவரது முன்னாள் கணவர் பிஜூ நாராயணன் ஆகியோர்களுக்கு தலா 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.