உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • IndiaGlitz, [Sunday,November 27 2016]

திமுக தலைவர் மு.கருணாநிதியின் பேரனும், தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், பிரபல நடிகர், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நமது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இளையதளபதி விஜய் நடித்த 'குருவி' படத்தின் மூலம் திரையுலகில் தயாரிப்பாளராய் காலடி எடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலின், அதன் பின்னர் சூர்யா நடித்த 'ஆதவன்', கமல்ஹாசன் நடித்த 'மன்மதன் அம்பு' ஆகிய படங்களை தயாரித்தார். 'ஆதவன்' படத்தில் ஒரே ஒரு காட்சியில் திரையில் தோன்றிய உதயநிதி, அந்த காட்சிக்கு கிடைத்த வரவேற்பால், 'ஒருகல் ஒருகண்ணாடி' படத்தின் மூலம் ஹீரோவானார். எம்.ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்த அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனதால், தமிழ் சினிமாவில் உதயநிதியும் ஒரு ஹீரோவாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
இதன்பின்னர் உதயநிதி நடித்த 'இது கதிர்வேலன் காதல்', 'கெத்து' ஆகிய படங்கள் சுமாராக போனாலும், அவர் நடித்த 'மனிதன்' படம் சூப்பர் ஹிட் ஆகியது. அஹ்மத் இயக்கிய இந்த படம் உதயநிதிக்கு ஒரு திருப்புமுனையை கொடுத்துள்ளது.
இதுவரை தனது சொந்த பேனர் படங்களில் மட்டுமே நடித்து வந்த உதயநிதி தற்போது ஸ்ரீதேனானாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'பொதுவாக என் மனசு தங்கம்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் அவருடைய தயாரிப்பில் 'சரவணன் இருக்க பயமேன்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவுலகில் நடிகர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் என வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் உதயநிதி மென்மேலும் தரமான படங்களில் நடித்தும், தயாரித்தும் வெற்றி பெற இந்த பிறந்த நாளில் மீண்டும் ஒருமுறை அவருக்கு எங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.