இயக்குனர் எழில் படம் என்றாலே புதுமையோ புரட்சியோ இல்லையென்றாலும் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது பொழுதுபோக்குக்கு உத்திரவாதம் இருக்கும். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கும் அவர் சரவணன் இருக்க பயமேன் படத்தின் மூலம் தன் பெயரையும் வெற்றிப்படங்கள் பல தந்த அந்த கம்பெனி பெயரையும் காப்பாற்றினாரா என்பதை பாப்போம்.
அரத பழசான அதே கிராமத்து சரவணன் (உதயநிதி ஸ்டாலின்) தனக்கு ஏட்டிக்கு போட்டியாக இருந்து ஊரை விட்டு சென்ற முறை பெண் தேன்மொழி (ரெஜினா கேசன்ட்ரா) திரும்பி வர அவர் மீது காதல் கொண்டு அவள் மனதில் இடம்பிடிக்க கடைசி வரை போராடுவதே கதை. இதில் ஒரு சின்ன திருப்பம் என்னவென்றால் இறந்து போன ஹீரோவின் முன்னாள் காதலி பாத்திமாவின் ஆவி (ஸ்ருஷ்டி டாங்கே ) கதாநாயகியின் உடம்பில் புகுந்து காதலுக்கு கை கொடுப்பது. காமடி வில்லன் மன்சூர் அலி கான் தன் மகன் சாம்ஸ்க்கு ரெஜினாவை நிச்சயம் செய்ய சரவணனின் மாமா சூரியம் அவர்களுடன் சேர்ந்து சாதி செய்ய கடைசியில் காதல் கை கூடுகிறதா என்பதே மீதி கதை.
படத்தில் மனதில் நிற்பது என்னவோ தேன்மொழியாக வரும் ரெஜினாதான், பாடல் காட்சியில் கவர்ச்சி, ஹீரோவுடன் மோதும்போது முறுக்கு, சூரி கூட்டணியில் காமடி மற்றும் ஆவி புகும்போது அளவான நடிப்பு என்று ஸ்கோர் செய்கிறார். ஓகே ஓகே வில் காமடி தர்பார் மற்றும் மனிதனில் குணசித்ர நடிப்பு என்று தன்னை நிரூபித்த உதயநிதி ஸ்டாலின் தன் கதாபாத்திரத்தை எதார்த்தமாக செய்தாலும் உப்பு சப்பில்லாத திரைக்கதை அவருக்கு கை கொடுக்க வில்லை. கஷ்டப்பட்டு சூரி சில இடங்களில் சிரிப்பு மூட்டுகிறார், அந்த ஆட்டக்காரி வீட்டில் சாம்ஸுடன் அவர் செய்யும் கலாட்டா அதிரடி. யோகி பாபு, ரோபோ ஷங்கர், ரவி மரியா, மனோபாலா, மதுமிதா, மன்சூர், போன்ற தேர்ந்த நகைச்சுவை நடிகர்களோடு சேர்த்து வளர்ந்து வரும் முல்லை, கோதண்டம் மற்றும் குரைஷியும் அநியாயத்துக்கு வீணடிக்க பட்டிருக்கிறார்கள். சூப்பர் குட் லக்ஷ்மன் மட்டும் க்ளைமாக்சில் முதலாளி மன்சூரை எதிர்க்கும் போது வரும் கொளுத்தி போடும் சிரிப்பு மத்தாப்பால் தப்பித்து கொள்கிறார். முக்கியமான திருப்பு முனையாக வந்திருக்க வேண்டிய ஸ்ருஷ்டி டாங்கேவின் ஆவி கதாபாத்திரம் சொத சொதப்பாகி போய் விடுவது பரிதாபம்.
உதயநிதி ஸ்டாலினால் பாதிக்கப்பட்டு சூரி துபாயில் சென்று அவதி படுவது, ரெஜினாவுடன் சேர்ந்து அவரை பழி வாங்க திட்டம் போடுவது மற்றும் சாம்ஸுடன் அந்த ஆட்டக்காரியின் வீட்டில் செய்யும் அட்டகாசம் படத்தின் ஹைலைட்ஸ். ஸ்ருஷ்டி ரெஜினாவின் உடம்புக்குள் புகுந்து அவர் வீட்டில் போய் பெற்றோருடன் பிரியாணி சாப்பிடும் இடம் நெகிழ்ச்சி.
டி இமானின் பாடல்கள் சுமார் ரகம், பின்னணி இசையோடு, கே ஜி வெங்கடேஷின் துல்லியமான ஒளிப்பதிவும், ஆனந்த் லிங்ககுமாரின் நேர்த்தியான படத்தொகுப்பும் படத்தை பார்க்கும்படி செய்கின்றன. வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நிமிடத்திற்கு நிமிடம் சிரிக்க வைத்து வெற்றி கொடி நாட்டிய எழிலா இந்த அமெச்சூர்தனமான படத்தை எடுத்தார் என்ற கேள்வி பல ரசிகர் நெஞ்சங்களில் எழும்.
உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரெஜினாவின் ரசிகர்கள் ஆங்காங்கே தெளிக்கப்பட்டிருக்கும் சிரிப்போடு ரசிக்கலாம்.
Comments