கள்ளச்சாராய மரணத்திற்கு யார் காரணம்? யார் பொறுப்பேற்பது? சரத்குமாரின் அடுக்கடுக்கான கேள்விகள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் இந்த சம்பவத்திற்கு நடிகர் சரத்குமார் வருத்தம் தெரிவித்து சில அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 29-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி தமிழ்நாட்டு மக்களிடையே பதட்டத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொலைதூர, கிராமப்பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது என தகவல் பரவிய நிலையில், மாநகரித்திலே துணிச்சலாக போதையை அதிகரிக்கும் மெத்தில் ஆல்கஹால் என்னும் உயிரைக் கொல்லக்கூடிய கடும் விஷத்தை விற்பனை செய்துள்ளனர். இந்த விஷத்தை குடித்து அன்றாட தொழிலுக்கு செல்லும் சாமானுய கூலி மக்களின் உயிர்பறிபோயுள்ளது.
தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பொருட்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற வலியுறுத்தல் அனைத்து தரப்பினரிடம் இருந்தும் ஓங்கி ஒலிக்கும் போதெல்லாம், இதுபோன்று கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்கின்றன.
உதாரணம், கடந்த ஆண்டு விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 22 பேர் உயிரிழந்த சம்பவம். கள்ளச்சாராயம் குடித்து மரணம் என்பது தொடர்கதையாகி வரும் நிலையில், இதனால் ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்கு யார் காரணம்? யார் பொறுப்பேற்பது? சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் தயாரிப்பதில் ஈடுபட்ட கயவர்களை கண்காணிக்க தவறிய அரசு அதிகாரிகளா, காவல்துறையினரா, அல்லது தமிழக அரசா?
உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் நிர்க்கதியாக நிற்பதை காணும் போது, மனம் தீராத வேதனையடைகிறது. 29 உயிரிழப்புகள் என்பது 29 குடும்பங்களுக்கான பேரிழப்பு என்பதை அரசு உணர வேண்டும்.
கள்ளச்சாராயத்தை தவிர்க்கவே, மதுபானங்கள் அரசால் தயாரித்து விற்கப்படுகிறது என்ற நிலையில், சட்டவிரோதமாக தொடரும் கள்ளச்சாராய விற்பனைகளை இனியும் அலட்சியம் காட்டி தவிர்க்காமல், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இனி எக்காலத்திலும் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படாத வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், இந்த சம்பவத்திற்கு தமிழக அரசு தார்மீக பொறுப்பேற்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பும், நிவாரணமும் வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
#Kallakurichi pic.twitter.com/7nBsnd7hYV
— R Sarath Kumar (@realsarathkumar) June 20, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout