டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் குறித்து நடிகர் சரத்குமார் கருத்து
- IndiaGlitz, [Wednesday,April 01 2020]
கடந்த மார்ச் 13 முதல் 15 வரை டெல்லியில் நடைபெற்ற மத சம்பந்தமான மாநாட்டில் தமிழகத்தில் இருந்து மட்டும் 1130 பேர் கலந்து கொண்டதாகவும், அவர்களின் தமிழகம் திரும்பிய 500க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை முடிந்துவிட்டதாகவும் மீதியுள்ளவர்கள் தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவித்து பரிசோதனைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத்துறை கேட்டு கொண்டுள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவத்தை வைத்து ஒரு சிலர் சமூக வலைதளங்களில் மத சம்பந்தமான சர்ச்சைக்குரிய கருத்துக்களை பரப்பி டென்ஷனை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கொரோனாவுக்கு எதிராக மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்ற நிலையில் இவ்வாறு விமர்சனம் செய்வது சரியல்ல என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பியவர்கள் குறித்து நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் அவர்கள் கூறியதாவது: டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களின் மீது மத துவேஷங்களுக்கு இடமளிக்க வேண்டாம். சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து கொரோனாவை எதிர்த்துப் போராட வேண்டிய தருணம் இது.
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட அனைவரும் தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.