ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு: மத்திய அரசுக்கு சரத்குமாரின் வேண்டுகோள்

இன்று காலை இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் செய்தியாளர்களை சந்தித்து ஒருசில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த அறிவிப்பு குறித்து நடிகரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

கொரோனாவால்‌ பொருளாதார தாக்கத்தை எதிர்கொள்ளும்‌ கூலித்தொழிலாளர்கள்‌, அமைப்பு சாரா தொழிலாளர்களின்‌ நலத்‌திட்டங்களுக்காக 1 லட்சத்து 70 ஆயிரம்‌ கோடி ரூபாய்‌ சலுகை தொகுப்பினை மத்திய நிதி அமைச்சர்‌ நிர்மலா சீதாராமன்‌ அவர்கள்‌ நேற்று அறிவித்திருந்தார்‌.

அதனை தொடர்ந்து பொருளாதார பாதிப்பை சரிசெய்ய 4 அம்ச திட்டமாக, போதுமான நிதி சந்தையில்‌ இருப்பதை உறுதி செய்தல்‌, வங்‌கிகள்‌ தாராளமாக கடன்‌ வழங்க ஏற்பாடு, கடனை இருப்பி செலுத்துவதில்‌ உள்ள நெருக்கடியை குறைத்தல்‌, சந்தையில்‌ ஏற்படும்‌ ஏற்றத்தாழ்வுகளை குறைக்க நடவடிக்கை என ரிசர்வ்‌ வங்கியின்‌ ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளை பாராட்டி வரவேற்கிறேன்‌.

குறிப்பாக வங்கிகளிடம்‌ தனிநபர்கள்‌, தொழில்‌ நிறுவனங்கள்‌ வாங்‌கியுள்ள கடன்களுக்கான மாத தவணைகளை செலுத்த 3 மாதங்கள்‌ கால அவகாசம்‌ வழங்கிடவும்‌, குறுகிய கால கடனுக்கான வட்டி 0.75% குறைத்தும்‌, ரெப்போ வட்டி விகிஇதம்‌ 5.15 விழுக்காட்டில்‌ இருந்து 4.4 விழுக்காடாக குறைத்தும்‌ ரிசர்வ்‌ வங்கியின்‌ கவர்னர்‌ அறிவிப்பு வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

அதே சமயம்‌, கொரோனா வைரஸ்‌ பாதிப்பு நிலை சீரான பின்பு, 3 மாத தவணைகளை ஒரே தொகையாக திருப்பி செலுத்துவதில்‌ உள்ள சிரமத்தை கருதி 3 மாதத்திற்கான தவணைத்‌ தொகையை மீண்டும்‌ ஒரு வருடமோ, இரண்டு வருடமோ சரிவிகிதத்தில்‌ பிரித்து அந்த தொகையையும்‌ இ.எம்‌.ஐ ஆக மாற்றி திரும்ப பெற்று கொள்ள பரிசிலித்து வங்கிகளுக்கு அறிவுறுத்த மத்திய அரசிடம்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

இவ்வாறு சரத்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.