தகவல் பரிமாற்றங்களுக்காக சரத்குமார் வெளியிட்ட செயலி
- IndiaGlitz, [Tuesday,December 12 2017]
தற்போதைய டெக்னாலஜி உலகில் எல்லாமே இனி செயலி மூலமே செயல்பட்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சமீபத்தில் கமல்ஹாசன், விஷால் ஆகியோர் தங்களுடைய செயலிகளை வெளியிட்ட நிலையில் தற்போது நடிகர் சரத்குமார் அவர்களும் ASK என்னும் செயலியை வெளியிட்டுள்ளார்
திரைப்பட நடிகர், பத்திரிக்கை துறை சார்ந்தவரும், ஒரு அரசியல் இயக்கத்தை நடத்திவரும் தலைவர் என்ற பன்முகத்தன்மை கொண்டு விளங்குபவருமான நடிகர் சரத்குமார் தனது செயலியின் மூலமாக அனைத்து தரப்பு மக்களோடும் நேரிடையாக தொடர்பு கொள்ளவும், கருத்துகளை பரிமாறிக்கொள்ளவும், ஒரு இணைப்புப் பாலமாக இந்த ASK என்னும் செயலியை அறிமுகப்படுத்தி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த செயலி, அவ்வப்போது நிகழும் மாநில, தேச மற்றும் உலக நிகழ்வுகளையும், அவை தொடர்பான உடனுக்குடன் ஏற்படும் பதிவுகளையும், மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்ப்பதற்காகவும், ASK குழுவோடும், நடிகர் சரத்குமார் அவர்களோடும் தகவல் பரிமாற்றங்களை நேரிடையாக பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்சனைகளை விரைவில் தீர்த்து வைக்கப்படும் களமாகவும், சமூக சீர்திருத்தத்திற்கான தளமாகவும், குடிமக்கள் எளிதில் அணுகக்கூடிய உற்ற தோழனாகவும் இச்செயலியின் செயல்பாடு அமைய உள்ளது.
பொதுமக்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் என்னென்ன, அவை எந்தெந்த வழிகளில் தீர்வு காணப்பட்டன, எத்தகைய அணுகுமுறை உபயோகப்படுத்தப்பட்டது போன்ற பல்வேறு விவரங்கள் இச்செயலியில் அடங்கி இருக்கும்.
படிப்பவர்களின் ஆர்வத்தை தூண்டும் விதமாகவும், ஊக்கமளிக்கும் விதமாகவும் விளங்கும் இந்த செயலி அமைந்துள்ளதாக சரத்குமார் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.