பிரபல தமிழ் திரைப்பட  இயக்குனர் திடீர் மறைவு.. எக்ஸ் தளத்தில் சரத்குமார் இரங்கல்..!

  • IndiaGlitz, [Monday,May 27 2024]

சரத்குமார் நடித்த இரண்டு திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் திடீரென காலமானதை அடுத்து சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த 1996 ஆம் ஆண்டு ’மாணிக்கம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சூர்யபிரகாஷ். இந்த படத்தில் ராஜ்கிரண் மற்றும் வனிதா விஜயகுமார் நடித்திருந்தனர். இதனை அடுத்து நான்கு ஆண்டுகள் கழித்து 2000 ஆண்டு சரத்குமார், மீனா நடித்த ’மாயி’ என்ற திரைப்படத்தை இயக்குனர் சூர்யபிரகாஷ் இயக்கினார் என்பதும் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது என்பதும், குறிப்பாக வடிவேலு காமெடி சூப்பராக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து 2002 ஆம் ஆண்டு ஒரு தெலுங்கு படத்தை இயக்கிய சூர்யபிரகாஷ், அதன் பின் சரத்குமார் நடித்த ’திவான்’ ஜீவன் நடித்த ’அதிபர்’ ஆகிய படங்களை இயக்கினார். இதனை அடுத்து அவர் ’வருசநாடு’ என்ற படத்தை இயக்கிய நிலையில் அந்த படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில் இயக்குனர் சூர்யபிரகாஷ் இன்று திடீரென காலமானதை அடுத்து நடிகர் சரத்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் செய்திகள் அவர் கூறியிருப்பதாவது:

எனது நடிப்பில் வெளியான மாயி, திவான் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய எனது அருமை நண்பர் சூர்யபிரகாஷ் அவர்கள் இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

நேற்றைய தினம் கூட அவருடன் பேசிக் கொண்டிருந்த நிலையில், நிலையற்ற வாழ்வில் அவரது எதிர்பாராத மறைவு என்னை பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. அவரைப் பிரிந்து வேதனையில் வாடும் அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.